எ - டு : | காமம் காமம் என்ப காமம் |
| அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக் |
| கடுத்தலும் தணிதலும் இன்றே யானை |
| குளகுமென் றாள்மதம் போலப் |
| பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே |
(குறு - 136) |
சூ. 185 : | குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும் |
(42) |
க - து : | இதுவுமது. |
பொருள் :தலைவன் குறிப்பினைக் குறித்துப் பாங்கன் எதிர் மொழிதல் சுருங்கித் தோன்றும். அஃதாவது சிறுபான்மையாக நிகழும் என்றவாறு. |
சூ. 186 : | துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் |
| வன்புறுத் தல்லது சேறல் இல்லை |
(43) |
க - து : | வினைவயிற் பிரியும் தலைமகற்காவதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவனது செலவைக் குறிப்பானறிந்து தலைவி துன்ப மிக்க பொழுதினும் அஃதறியாது ஒழுகும் பொழுதினும் எல்லாம் தலைவன் செய்வினைக்கண் பிரியுமிடத்து இன்னே வினை முடித்து மீள்வேன் எனத் தன் அன்பினையும் தலைவியது பண்பினையும் கூறி வற்புறுத்தியல்லது பிரிந்து செல்லுதல் புலனெறி வழக்கில்லை. |
எ - டு : | அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் |
| பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் |
| புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப் |
| பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர் |
| வருவர் கொல்வயங் கிழாய்! |
(கலி-11) |
எனத்தலைவி கூறியவாறு கண்டுகொள்க. |
சூ. 187 : | செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே |
| வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும் |
(44) |
க - து : | இது தலைவற் குரியதோரியல்பு கூறுகின்றது. |
பொருள் : ஓதல் முதலாய வினைக்கண் பிரிதலைக் கருதிய தலைவன் போதலைத் தவிர்ந்து இகழ்ந்திருத்தல் செல்லாமைக்குரியதன்று. அஃது தலைவியை வற்புறுத்தி ஆற்றுவித்துப் பிரிதலைக் கருதுதலாகிய தவிர்ச்சியாகும். |