பொருள் : இருமைக்கும் தமக்குத் தப்பாது காவலாக அமைந்த மக்களான் நிறைந்து, இல்லறத்திற்குத் துணை புரியும் ஏனைச் சுற்றத்தொடு மனையறத்தை மேற்கொண்ட கிழவனும் கிழத்தியும் ஊடியும் கூடியும் பெறும் காம நுகர்ச்சி நிரம்புதலான் முடிவு கொள்ளுங்காலத்தே பற்று நீங்கி வீடு பெறுதற்குச் சிறந்ததாகிய செயலினை நிகழ்த்துதல் நிகழ்ந்து முடிவுற்ற இல்லற வாழ்க்கையான் எய்தும் பயனாகும். |
அஃதாவது, இல்வாழ்க்கையை மேற்கொண்ட தலைவனும் தலைவியும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்தாறு ஓம்பி இயல்புடைய மூவர்க்கும் துணை புரிந்து நன்கலமாகிய அறிவார்ந்த மக்கட்பேறுற்று இன்பம் நிறைந்து ஏவலரும் காவலருமாகிய சுற்றத்தொடு அமர்ந்து இம்மை இன்பமாகிய காம நுகர்ச்சியான் நிரம்பி முடிவுறும். அவ் இல்லறத்தின் குறிக்கோள் மறுமைப் பேறாகிய வீடு பெறுதலாகலான் அதனைப்பெறுதற்கு ஆகும் சிறந்தசெயலை நிகழ்த்துதல் கழிந்த இல்லறத்தின் பயனாகும் என்றவாறு. |
தமது துய்ப்பறிவான் எய்திய மெய்யறிவினைப் பிறர்க்குத் தாம் ஒழுகும் ஒழுக்கத்தாற் புலப்படுத்த வேண்டுமென்பது தோன்றப் 'பயிறல்' என்னாது "பயிற்றல்" என்றார் என்க. |
சூ. 195 : | தோழி தாயே பார்ப்பான் பாங்கன் |
| பாணன் பாட்டி இளையர் விருந்தினர் |
| கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் |
| யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப |
(52) |
க - து : | இது கற்பொழுக்கத்தின்கண் தலைமக்களைச் சார்ந்து செயலாற்றும் வாயில்களாவார் இவர் எனக் கூறுகின்றது. |
பொருள் : தோழி முதலாகக் கண்டோர் ஈறாகக் கூறப்பெற்ற பன்னிருவரும் மனையறம் பேணும் தலைவன் தலைவியர் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளொடு பிணிக்கப்பெற்ற சிறப்பினையுடைய வாயில்களாவார் எனக் கூறுவர் புலவர். |
தாய் என்றது செவிலியை. தொன்முறைத்தாயும் அடங்கப் பொதுப்படத் தாய் என்றார். பார்ப்பான் என்றது உழையிருந்து நெறிப்படுத்தும் நூல் வல்லோனை. பாட்டி என்றது பண்ணொடு பாடும் மகளிரை. பாட்டி எனினும் பாடினி எனினும் ஒக்கும். விறலி என்றது விறல்பட ஆடும் நாடக மடந்தையரை. |