கற்பியல்191

கண்டோர்    என்றது   உடன்போக்கின்கண்   கண்டோரும்  பரத்தையர்
பிரிவின்கண் காண்டோருமாவாரை.
 

உடன்போக்குக்    கற்பினொடொக்கும்  என்பதனான்   கண்டோரைக்
களவிற்கும்  உரியராகக் கூறாமல் கற்பிற்கே உரியராகச் செய்யுளியலின்கண்
ஓதுமாறு காண்க.
 

சூ. 196 :

வினைவயிற் பிரிந்தோன் மீண்டு வருகாலை

இடைச்சுர மருங்கிற் றவிர்தல் இல்லை

உள்ளம் போல உற்றுழி யுதவும்

புள்ளியற் கலிமா உடைமை யான

(53)
 

க - து : 

வினைமுற்றி மீளும் தலைமகற்குரியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  போரும்  பொருளும்  பற்றிய வினைமேற் பிரிந்து சென்ற
தலைவன்  அவ்வினை  முடித்து  மீண்டுவருகாலை  வரும்  வழி   நெடிய
சுரமாயினும் அதன் இடைஇடத்தே தங்கி வருதல் புலனெறி வழக்கமில்லை.
அதற்கு ஏதுவாக  நினைத்த இடத்து நினைத்த அளவே விரைந்து செல்லும்
தனது  உள்ளத்தைப்போலத்  தான்கருதிய விடத்துக் கருதியாங்கு விரைந்து
செல்லுதற்குதவும்  புள்ளினை  ஒத்த  இயல்பையுடைய  கலிமாவை அவன்
பெற்றுள்ளமையான்.
 

கலிமா   =   தாவிச்   செல்லும்    செருக்குடைய   குதிரை.  தானே
இயங்காமையான்  தேரினைக்  கூறாமல்  பரிமாவைக்  கூறினார். அதனான்
கலிமா என்றது தேரினைப் பூண்ட கலிமா என்பது பெறப்படும்.
 

இதனாற்   பாலைக்குரிய   ஒழுக்கத்தினை    மேற்கொண்டு    பிரிவு
நிகழ்த்தும் தலைமக்களின்    தகவும்   செல்வச்  சிறப்பும்   ஆளுமையும்
குறிப்பாற்   புலப்பட வைத்தார். பிற  சிறப்புக்களை   மரபியலுட்   கண்டு
கொள்க.
 

கற்பியல் உரை முற்றியது.