பாயிரஉரை : இதுகாறும் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்த நல்லிசைப் புலமை சான்ற நூலோர் வகுத்தோதிய தொல்லிலக்கண வழக்கினை ஆராய்ந்து அகத்திணையியல் முதலாய நான்கியலுள்ளும் ஓதப்பெற்ற இலக்கணங்கள் யாவும் மக்களின் அக ஒழுக்கமாகிய இன்பமும் (காதல்) புற ஒழுக்கமாகிய ஆளுமையும் (வீரமும்) பற்றிப் புலவோர் செய்யுள் செய்யுமிடத்து உலகியல் வழக்கும் நாடக வழக்கும் பொருந்தச் செய்தல் புலனெறி வழக்கிற்குரியதாகும் என வரைந்து அவற்றுள் உலகியல் வழக்கு உலக நடையானும் துய்ப்புணர்வானும் அறிந்து கோடற்கியல்வ தொன்றாகலின் அதனை விரித்துரையாமல் நாடக வழக்குப் பற்றிய நெறிகளை நூல்நெறி மரபான் விதந்து கைக்கிளை முதலாக அமைந்த அகத்திணை ஏழும், அவற்றின் புறமாக நிகழும் வெட்சித்திணை முதலாய ஏழும், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றினையும் அடிப்படையாகக் கொண்டு கருப்பொருளின் ஒரு கூறாகிய மாந்தர்பால் நிகழும் ஒழுகலாறாகும் என உணர்த்தினார். |
மேலும் இன்பப்பொருளாகிய காதல் பற்றி நிகழும் அகப்பொருள் ஒழுகலாறுகளைக் கூறுமிடத்துச் சுட்டி ஒருவர் பெயர் கூறாமல் நானிலத்தில் உள்ள ஆடூஉ மகடூஉ யாவர்க்கும் ஒப்ப எக்காலத்தும் பொருந்துமாறு கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி என அமைத்து அவர்தம் ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன், தோழி, செவிலி, பரத்தை முதலானோரையும் பார்ப்பார் அறிவர் பாணர் கூத்தர் பாடினி இளையோர் முதலானோரையும் வகுத்து அவரவர்க்குரிய இலக்கணங்களையும் விரித்தோதினார். |