| சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாது |
| ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ |
| அருளா னாகலின் அழிந்தி வண்வந்து |
| தொன்னலன் இழந்தவென் பொன்னிறம் நோக்கி |
| ஏதிலாட்டி இவளெனப் |
| போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே |
(நற்-56) |
எனத் தலைவி தன்னெஞ்சிற்கு உயர்திணை முடிபு தாராமல் அஃறிணை முடிபே தந்தவாறு கண்டு கொள்க. |
பிறவாறு வருவன பற்றி எல்லாம் இனிவரும் நூற்பாக்களான் ஆசிரியர் கூறுமாற்றான் அறிந்து கொள்க. |
இதற்கு இளம்பூரணர் கூறும் உரையும் விளக்கமும் சொல்லிலக்கணமாக அமைதலன்றி, ஈண்டைக்கு ஒவ்வாமையறிக. நச்சினார்க்கினியர் தம் வல்லுரைக்கேற்ப 'அசைதிரிந்தியலா' எனப் பாடங் கொள்வார். |
சூ. 198 : | நோயும் இன்பமும் இருவகை நிலையிற் |
| காமங் கண்ணிய மரபிடை தெரிய |
| எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய |
| உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் |
| மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் |
| சொல்லா மரபின வற்றொடு கெழீஇச் |
| செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் |
| அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் |
| அறிவும் புலனும் வேறுபட நிறீஇ |
| இருபெயர் மூன்றும் உரிய வாக |
| உவம வாயிற் படுத்தலும் உவமம் |
| ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி |
(2) |
க - து : | மேற்கூறியவற்றான் செய்யுட் சொற்கள் பொருள் திரிந்து இசைக்கும் இடமும் இசைக்கும் முறைமையும் அவற்றை இசைப்போரும் பற்றி நிகழும் ஒருசார் அகப்பொருட் கிளவிகள் ஆமாறு கூறுகின்றது. |
பொருள் : நோயும் இன்பமும்....... தெரிய என்பது = பிரிவும் புணர்வும் காரணமாக உறும் துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலைமையுடைய காம ஒழுக்கத்தைக் கருதிய மரபினது இடம் நன்கு விளங்க என்றவாறு. இம்மரபு ஈண்டு இவ்வாற்றான் அமைந்தது என உணருவதற்கு "மரபு இடை தெரிய" என்றார். |