பொருள்களும்   அகத்திணைக்கே உரிய பொருள்களும் - என்பன பிரித்து
உரைக்கப்பட்டுள்ளன   என்பது   இவர்   கருத்து.   (நூ. பாயிரம்-நூ. 12,
தொடக்கம் நூ. 13 பாயிரம்)
 

மெய்ப்பாட்டுப்   பொருள்கள்   பலவற்றிற்கு    இவர்   வழங்கியுள்ள
விளக்கங்கள் முன்னை  உரையாசிரியர்கள் விளக்கங்களைவிடச்   சிறப்பாக
உள்ளன. அவற்றை ஊன்றி நோக்கி உளங்கொளல் வேண்டும்.
 

பேராசிரியர்   பெரும்பாலனவற்றை   மெய்ப்பாடு   என்றே கூற இவர்
அவற்றை எல்லாம்  மெய்ப்பாட்டுக்கு  நிமித்தமாகிய   பொருள்   என்றே
கூறுதல்   பெரிதும்   நுண்ணுணர்வுடைத்து.  பேராசிரியர் சுவைப்பொருள்
என்பதன் கண்ணேயே சுவைத்தோனை அடக்கிச்  சுவையுணர்வு,   குறிப்பு,
விறல் என்று கொண்டதனைவிட இவர்  சுவைத்தோனுடைய சுவையுணர்வில்
குறிப்பை அடக்கியது பொருத்தமாகத் தோன்றுகிறது.
 

மேல் புகுமுகம் புரிதல்  முதலியவற்றின்கண்   அகப்பொருள்   பற்றிய
செய்திகள்   கூறப்படுதலின், "உடைமையின்புறல்"  என்ற  நூற்பா நுவலும்
பொருள்களை இவர்   புறப்பொருளுக்கே  கொண்டு   எடுத்துக்காட்டுடன்
விளக்கும் புதுமை நயக்கத்தக்கது.
 

புகுமுகம்புரிதல் முதலிய  மெய்ப்பாட்டுப் பொருள்கள் தோன்றுதற்குரிய
களவியல், கற்பியல்   செய்திகளையும்   கிளவிகளையும்  இவர் ஒவ்வொரு
நூற்பா உரையிலும் பொருத்தமுறக் குறித்துச் செல்லும் பாங்கு மிக இனியது.
 

'ஆங்கவை ஒருபாலாக' 'புகுமுகம் புரிதல்'   'இன்பத்தை   வெறுத்தல்'
'முட்டுவயிற் கழறல்'   'தெய்வம் அஞ்சல்'   'பிறப்பே குடிமை'   'நிம்பிரி
கொடுமை' 'கண்ணினும் செவியினும்' என்ற நூற்பாக்களின் கருத்து விளக்கம்
பற்றிய   செய்திகள்     மிகவும்     தெளிவு       தரும்     வகையில்
விரித்துரைக்கப்பட்டுள்ளன.   "செறாஅச்   சிறுசொல்லும்   செற்றார்போல்
நோக்கும்"   கண்ணினும்     செவியினும்     திண்ணிதின்   உணருமாறு
அமைந்திருத்தல் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
  

'ஆங்கவை   ஒருபாலாக   ஒருபால்'   என்ற  நூற்பாற் தொடக்கமாக
இறுதிவரை   மெய்ப்பாட்டிற்குரியனவாகக்   கூறப்பட்டுள்ள   பொருள்கள்
யாவற்றுக்கும் இவ்வுரையாளர் நகை, அழுகை முதலிய   மெய்ப்பாடுகளைப்
பொருத்திக் குறிப்பிடுதல் இக்காண்டிகையின்  சிறப்புக்குரிய   செய்திகளுள் தலையாயது.