| நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது |
| காட்ட லாகாப் பொருள என்ப |
(52) |
க - து : | வண்ணம் வடிவு அளவு சுவை முதலாகிய குணங்களின் வேறாய்த் துய்த்தறியப்படும் சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பொருள்களையும், மெய்ப்பாடு வாயிலாகத் தெளியப்படும் அச்சம், பெருமிதம், உவகை முதலாய பண்புகளையும் செயல் வாயிலாக அறியப்படும். அழுக்காறு, அவா, அடக்கம் முதலிய குணங்களையும் போல ஐம்பொறி வாயிலாக உணரப்படாமல் எஞ்ஞான்றும் உள்ளத்துணர்வான் தாமே தெரிந்தறிதலன்றி ஒருவாரற் புலப்படக்காட்டுதற்கு ஆகாதன இவை எனக்கூறுகின்றது. |
இவை அகப்பொருளிலக்கணத்தின் கண் கட்புலனாகக் காணப் படுவனபோல நனி பயின்று வருதலின் இவற்றை விதந்தோதினார். இவை உணர்வோர் தம் சால்பிற்கேற்ப அஃகியும் அகன்றும் தோற்றப்படுதலின் இவற்றைப் பொருளியலுள் வைத்தோதினார் என்க. |
பொருள் : ஒப்பு முதலாக நுகர்ச்சி ஈறாகக் கூறப்பட்டனவும் அவை போல்வனவாய் அவ்வழிவருவனவும் எல்லாம் புலனெறி வழக்கின்கண் சான்றோர் நிறுவிய இலக்கணத்தான் நெஞ்சத்துத் தாமே உணர்ந்து கொள்ளினன்றி ஐம்பொறி வாயிலாக அறியுமாறு ஒருவராற் காட்டற்கு ஆகாத பொருண்மையின எனக்கூறுவர் புலவர். |
1) ஒப்பு என்றது, உவமத்தையும் பொருளையும் வேறுவேறாக வைத்து உவமித்துக்கூறும் ஏனை உவமம் போலாமல் 'தந்தையை ஒப்பர் மக்கள்' என்றாற்போல உள்ளத்தான் உணரவரும் ஒப்புமைப்பண்பாம். |
2) உரு என்றது, அரிமா முதலியவற்றைக் கண்டு அஞ்சும் அச்சம் போலாமல் அன்பு காரணமாக உள்ளத்தே தோன்றும் உட்கு என்னும் உணர்வாகும். |
3) வெறுப்பு என்றது, மறைபிறரறியாமல் அடக்கும் உள்ளத்தின் செறிவாம். |
4) கற்பு என்றது, கொண்டானிற் சிறந்ததொரு தெய்வமில்லை என்னும் பூட்கையாம். |
5) ஏர் என்றது, இயல்பாக அமைந்த பொற்பினது எழுச்சியாம். அஃது, அசையியற் குண்டாண்டோர் ஏஎர் (குறள்-1098) எனத்தமக்கே புலனாகும் தோற்றமாம். |