எனவே புறத்திற்கும் அகத்திற்கும் பொதுவாக உள்ள மெய்ப்பாட்டிற்குரிய பொருள்கள் - புறத்திற்கே சிறப்பாக உரிய மெய்ப்பாட்டிற்குரிய பொருள்கள் - அகத்திற்கே சிறப்பாக உரிய மெய்ப்பாட்டிற்குரிய பொருள்கள் என்ற முத்திறப் பொருள்களையும் பெரும்பாலும் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கி அவற்றிற்குரிய மெய்ப்பாடுகளாக நகை முதலிய எட்டனுள் உரியவற்றை அவற்றொடு பொருத்திச் செல்லும் இக்காண்டிகையுரை மெய்ப்பாடு எட்டே என்பதையும் 32 + 32 + 24 + 20 + 8 + 10 = 126 ஆகக்குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் மெய்ப்பாடுகளை விளக்கும் பொருள்களேயன்றி மெய்ப்பாடுகள் அல்ல என்பதனையும் குறிப்பிடும் செய்தி இவ்வுரைக்குரிய தனிச்சிறப்பாகும். |
நாடகக் காட்சியுள் பொருள்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பாடு அவனுடைய மெய் வாயிலாகவும் உரை வாயிலாகவும் வெளிப்படுதலான் அதனைக் காண்போன் அச்சுவையைத் தன் கண்ணானும் செவியானும் கண்டும் கேட்டும் எய்துவது போலக் காட்சியளவையான் உணர்ந்து எய்தும் அவ்வறிவே செய்யுள் உறுப்பாகிய மெய்ப்பாட்டினை உணர்ந்து கோடற்கும் கருவியாம் என்பது இவ்வியல் தொடக்கத்தும் இறுதியும் இவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்யுட்கண்வரும் நிகழ்ச்சிகள் அகவிழிக்கும் அகச்செவிக்கும் புலனாதலின். |
நாடக உணர்வுகள் சுவை என்றும் நாட்டிய உணர்வுகள் மெய்ப்பாடு என்றும் குறிப்பிடும் இவ்வுரைகாரர் நாடகத்தை ஒத்து அகவிழிக்கும் அகச் செவிக்கும் புலனாகி நகை அழுகை முதலிய சுவைகளை விளக்கும் செய்யுட்கண் அமைந்திலங்கும் மெய்ப்பாட்டினைச் சுவை என்று கொள்ளுதற்கண் இழுக்கு என்ன என்பது புலப்படவில்லை. |
நாடகத் தமிழுக்குரிய சுவைகளே இயற்றமிழாகிய செய்யுட்கண் பொருள் புலப்பாடு செய்யும் மெய்ப்பாடு என்னும் உறுப்பாக அமைகின்றன என்று கூறும் இவர் இவற்றிடையே வேற்றுமைகாணும் செய்தி புலப்படவில்லை. |
நாடகத்திற்குரிய சுவை எட்டும் இயற்றமிழின் கண் செய்யுளுறுப்பாக அமைந்து பொருள் புலப்பாடு செய்யுமிடத்து அவை மெய்ப்பாடாகும். நாடகக் காட்சியாகக் காண்போரின் உணர்வளவாக நிகழுமிடத்து அவை சுவையாகும். நாலிரண்டென்பது மெய்ப்பாட்டியலிற் கூறிய நகை முதலாகிய நாடகச் சுவையினையாம் - என்ற உவமவியற் காண்டிகையுரை உளங் கொளத்தக்கது. எனவே சுவைமெய்ப்பாடு என்ற இவற்றைப் பற்றிய தெளிவான செய்திகள் நன்கு புலப்படவில்லை. |