பொருளியல்255

பொருள்கள் இல்லாததொரு  காலம்  இன்மையான்  அவை  நெஞ்சத்தான்
உணர்த்து கொள்ளப்பெறும் உள்பொருளேயாம்.
 

'தேஎம்' என்றது மறையோர்  தேஎம்  (களவு - 1)   என்புழிப்  போல
ஏழாவதற்குரிய  இடப்பொருள்   குறித்து   நின்றது.   எறிகடல்  வரைப்பு
என்றது   ஆகுபெயர்.   "அவையில்   காலம்   இன்மையான்"   என்றது
அப்பொருள்களை இல்லாமல்  புலவோர்  செய்யுள்  செய்யும்  ஓர்  காலம்
இல்லை என்றவாறு.
 

ஒப்பு முதலாயவை ஒருசார் பண்புகளேயாதலானும் பண்பியின்றி அவை
உணரப்படாவாகலானும் அப்பண்புடையாரைச் சுட்டி இமையோர் தேஎத்தும்,
எறிகடல் வரைப்பினும் என்றார்.
 

உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்  என்னும் இலக்கணத்தான்,
மக்களது  ஒழுகலாற்றினை   எல்லாம்   ஏற்றிக்   கூறப்பெறும்  தெய்வப்
பகுதியினர்  "காமப்பகுதி  கடவுளும்  வரையார்"  எனப்  பாடாண்டிணைக்
குரியவராக நூலோரான் ஓதப்பெற்றமையான் அவரும் அடங்குதல் வேண்டி
இமையோர் தேஎத்தும் என்றார் அக்கருத்தானே  அவரை  முன்  வைத்து
ஓதினார் என்க.
 

ஒப்பு  முதலாயவை    நெஞ்சத்தான்    உணர்ந்து   கொள்ளப்பெறும்
உள்பொருளேயாம் என்னும் முடிபு இசையெச்சமாக வந்தது.
 

இனி, ஒப்பு முதலியவை  உலகத்து  எஞ்ஞான்றும்  உள்ள  பொருளே
எனத் தெரிவித்தல் இதன்  கருத்தென்பார்  ஒருசாரார்.  அஃது  ஆசிரியர்
கருத்தாயின் "அவை உலகத்தில் இல்லாமலில்லை"  எனக்  கூற  அமையும்
'அவைஇல் காலம் இன்மை யான்' எனக் காலத்தைச் சுட்டிக் கூறினமையான்
புலவோர்  செய்யுள்  செய்யும்  செயற்பாட்டினைச்   சுட்டுதலே  ஆசிரியர்
கருத்தென்பது    நன்கு    விளங்கும்.   காலம்   வினைபற்றி   அறியப்
படுவதொன்றாகலின் என்க.
 

இப்  பொருளியற்   கோட்பாட்டின்  நுண்மை  தோன்ற  இவ்  இறுதி
நூற்பாவினை  ஆசிரியர்  இசையெச்சமாக  அமைத்த  நயத்தினை  ஓர்ந்து
கொள்க.
 

பொருளியல் உரை முற்றியது.