பொருளதிகாரம் |
ஆறாவது - மெய்ப்பாட்டியல் |
பாயிர உரை :- ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளிலக்கணப் பகுதியாக அகத்திணை, புறத்திணை பற்றிய இலக்கணங்களை நான்கு இயல்களாகத் தொகுத்துக்கூறி அக ஒழுக்கத்திற்கும் புற ஒழுக்கத்திற்கும் உரிய இயல்புகளைச் செவ்விதின் உணர்தற்குரிய இலக்கணங்களைத் தொகுத்துப் பொருளியல் எனக் குறியீடு செய்து ஐந்தாவது இயலாக அமைத்துப் பின்னர் அகத்திணை - புறத்திணைக்குரிய மாந்தர்களின் ஒழுகலாறு காரணமாகப் புலப்படும் அவர்தம் உணர்வுகளைச் செய்யுள் வாயிலாக அறிதற்குரிய மெய்ப்பாடு பற்றிக் கூறும் இயலை ஆறாவதாக ஓதுகின்றார். |
உரிப்பொருள் முதலியவற்றைச் செவ்விதின் புலப்படுத்தலின் மெய்ப்பாட்டினைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாக அமைத்து அதன் இலக்கணத்தை மரபின்வழி வகைப்படுத்து விளக்குதலின் இவ்வோத்து மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்தாயிற்று. எனவே மெய்ப்பாடு என்பது பொருள் புலப்பாட்டினைச் செய்வது என்பது போதரும். |
அகத்திணை ஒழுகலாறு பற்றி யாப்பின் வழிச்செய்யுள் செய்யும் நல்லிசைப் புலவோர்க்கு அச்செய்யுளாவது |
"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் |
பாடல் சான்ற புலனெறி வழக்கம்," என்றும், அது |
"கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும்" (56) என்றும் |
அகத்திணையியலுள் தோற்றுவாய் செய்தமையான், செய்யுளுறுப்புக்களை வரையறை செய்யுங்கால், நாடகவழக்கொடு தொடர்புடைய மெய்ப்பாட்டினையும் ஓர் உறுப்பாக ஓதியமைத்தார். |
தொன்னூலாசிரியன்மார் பொருள்புலப்பாட்டிற்குத் துணை செய்யும் உவமத்தைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளாமல் அதனைத் திணையுணர்தற்குக் கருவியாகச் சுவைப்பொருளின் அடிப்படையிற்றோன்றும் மெய்ப்பாட்டினைச் செய்யுளுறுப்பாகக் கொண்ட நுண்மையினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். |
எல்லாவற்றையும் ஆரியநூற் கண்கொண்டு நோக்கிய உரையாசிரியன்மார் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாடு என்னும் உறுப்பினை நாடகநூலார் கூறும் சுவையாக (இரசபாவமாக)வே கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். |