260மெய்ப்பாட்டியல்

மெய்ப்பாடு  செய்யுள்   உறுப்பினுள்  ஒன்று   என்பதனான்   அதன்
இலக்கணத்தைச் செய்யுளியலுள் ஓதி, அதன் வகையும் முறையும் பொருளும்
பற்றி   ஈண்டு   விளக்கிக்   கூறுகின்றார்.  ஓராற்றான்  பொருளியளோடு
தொடர்புடைமை   பற்றி   என   அறிக.  இனி  மெய்ப்பாடு  என்பதற்கு
இலக்கணம்,
 

உய்த்துணர்வின்றித்தலைவரு பொருளான்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்        என்றும், அதுதான்
 

எண்வகை இயல்நெறி பிழையா தாகி

முன்னுறக் கிளந்த முடிபின ததுவே

(செய்-196, 197)
 

என்றும்    கூறி    அமைத்தார்.   அச்சூத்திரங்களான்   மெய்ப்பாடாவது
இதுவென்பதும், அஃது எட்டு வகையாகத் தோன்றும் என்பதும் புலனாகும்.
 

இனி  இயல்,   இசை,   நாடகம்   என்னும்   மூவகைக்   கலைகளுள்
ஒவ்வொன்றின்பாலும் ஏனையவற்றின் கூறுகள்  விரவி  வருதல்  இயற்கை
எனினும், அரங்கின்கண்  காட்சியளவையாக  நிகழும்  நாடகம்,  உரையும்
பாட்டும்  கலந்து   அமைந்து   நிகழ்தலான்  அஃது  இயற்கலையாகவோ
இசைக்கலையாகவோ  ஆகிவிடாது.  நாடகமானது  ஒரு  கதை  (வரலாறு
அல்லது நிகழ்ச்சி) யுள்  வரும்  மாந்தரை-ஒப்பப்  பொருநர்தாம்  வேடம்
(ஒப்பனை) புனைந்து  நடித்துக்  காட்சியாகப்  புலப்படுத்துவதும்; ஒருவரே
கதை   மாந்தர்    பலரின்    தன்மை    இயல்புகளை   வினையத்தான்
(அவினயத்தான்) முறையொடு ஆடிக்காட்சியாகப் புலப்படுத்துவதுமாகும்.
 

நாடகம் என்னும் தமிழ்ச்சொல் அவிநயக்  கூத்தினையும், கதை  தழுவி
(ஆடப்பெறும்) நடிக்கப்  பெறும்  பொருநர்  தம்  ஆடலையும்  குறிக்கும்.
இச்சொல்  இடைக்காலத்தில்  பொருநர் தம்  ஆடற்கலையைச்  சிறப்பாகச்
சுட்டி வழங்கலாயிற்று. அவினயக் கூத்து நடம்-நாட்டியம் என்னும் பெயரால்
வழங்கலாயிற்று. இற்றைக்கும்  அவ்வழக்கு  நிலவுதலின்  தொன்னூல்களுள்
வரும்  நாடகம்   என்னும்    சொல்லின்   பொருள்   பயில்வோருக்குத்
தடுமாற்றத்தைத் தருவது இயல்பேயாகும்.
 

கதை தழுவி வரும்  நாடகக்  கூத்தின்கண்  கதை  மாந்தராக  வேடம்
பூண்ட பொருநர்-தம் நடிப்பானும் உரையானும் புலப்படுத்தும்  உணர்வுகள்
சுவை (ரசம்) என்னும் நாடகத் தமிழின் உறுப்பாகும். நாட்டியக் கூத்தின்கண்
விறலி தன்  அவினயத்தாற்  புலப்படுத்தும்  உணர்வுகள்  மெய்ப்பாடாகும்.
ஈண்டு மெய்ப்பாடென்பது மெய்யின்கண் தோன்றுவது என்னும் பொருள்பட
நின்றது.