நாடக உறுப்பாகிய சுவை, காண்போரின் அறிவொடு கலந்து அவரை அவ்வுணர்வினராகவே ஆக்கிவிடும். நாட்டிய உறுப்பாகிய மெய்ப்பாடு காண்போரின் அறிவினைச்சார்ந்து அவ்வுணர்வினைப் புலப்படுத்தி நிற்கும். அஃதாவது நாடகத்துள் நிகழும் அழுகைக் காட்சியைக் காண்போர், தாமும் அழுவர். நாட்டியமகள் அவினயித்துக் காட்டும் அழுகையைக் காண்போர் அறிந்து கொள்வதன்றி அழுதலைச் செய்யார். அதனான் நாடக உணர்வுகள் சுவையென்றும் நாட்டிய உணர்வுகள் மெய்ப்பாடென்றும் தொன்னூலாசிரியன்மார் வேறுபடுத்தினர். |
இசைக்கலையான் உணர்த்தப்படும் உணர்வுகள் இசை கேட்போரைத் துய்க்கச் செய்வதன்றிச் சுவையினராக மாற்றுதலில்லை. அதனால் அது நாடக உறுப்பாகிய சுவையினின்று வேறுபட்ட சுவையுணர்வாக அமையும். இதனைத் தன்மை (பாவம்) என்று குறிப்பிடுவர். இசையானது பொருளைப் புலப் படுத்துவதின்மையான் மெய்ப்பாடு எனற்கேலாதாயிற்று. இசை பாட்டொடு (செய்யுளொடு) கலந்து நிகழுங்கால் ஒருகால் சுவையாகவும் ஒருகால் மெய்ப்பாடாகவும் இலங்கும். |
இயற்றமிழின்கண் இலக்கியக்கலையுள் செய்யுளிடத்து அமைக்கும் (அமையும்) உணர்வுகள் ஒலிவடிவாயின் செவி வாயிலாகவும் வரிவடிவாயின் விழிவாயிலாகவும் புக்கு அச்செய்யுளுணர்த்தும் நிகழ்ச்சிகள் அகத்தே புலப்பாடாகி நிற்றலின் மெய்ப்பாடென்பது சுவைப் பொருளின் அடிப்படையிற் பொருள் புலப்பாட்டினைத் தலையாகக் கொண்டிலங்கு மென்க. எனவே, மெய்ப்பாடு சுவையோடு தொடர்புடையதாதலையும் உணரலாம். |
செய்யுள் இலக்கியத்தை அறிந்துணர்தற்குரிய கருவிகள் விழியும் செவியுமேயாதலின், கண்ணானும் காதானும் கண்டும் கேட்டும் சுவை கோடற்குரிய நாடகக் கலையுணர்வும் நாடகக் கலையறிவும் உடையார்க்கே செய்யுட்கண் அமைந்திலங்கும் மெய்ப்பாட்டியல்பினை அறிந்து கோடற்கியலும், அல்லாதார்க்கு அரிதாகும் என்பதை, ஆசிரியர் |
"கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் |
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் |
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே" |
(மெய்-27) |
என இறுதியில் விதந்து கூறுதலான் அறியலாம். அச்சூத்திரத்துள் "நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்து" என்பதனான் மெய்ப்பாடென்பது பொருட்பாடே என்பதும் தெளிவாம். |