"கண்ணினும் செவியினும்" என்றதனான் உரையாசியன்மார் பலர் மெய்ப்பாட்டினை நாடக உறுப்பாகிய சுவையாகவே (ரசம்) கருதி விளக்கிச் செல்வாராயினர். நாடகக் காட்சி வழங்கும் சுவை வேறு; செய்யுள் புலப்படுத்தும் மெய்ப்பாடு வேறு என அறிக. |
ஒரு செய்யுட்கண் உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் நிகழ்ச்சிக்குரிய உறுப்புக்களாக அமைந்திருக்கும். அவ்வுறுப்புக்களின் பண்புநிலை செயல்நிலைகள் பற்றிவரும் மெய்ப்பாடுகள் நாடகச் சுவைக்குரிய பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றுமாகலின் நாடகச்சுவை பற்றிய மரபினையும் எடுத்துக்காட்டிச் செய்யுட்குரிய மெய்ப் பாட்டிலக்கணத்தை வகுத்தோதுகின்றார் ஆசிரியர். |
உடம்பின்கண் தோன்றுதலான் மெய்ப்பாடாயிற்று; என ஒருசாரார் விளக்கம் காண்பர். அது நாட்டியக்கலைக்கு ஓரளவு பொருந்துமேனும் ஏனை உரையானும் உள்ளத்துணர்வாகிய நினைவானும் மெய்ப்பாடு தோன்றுதலின் ஈண்டைக்குப் பொருந்தாமை அறியலாம். |
இனி, மெய்ப்பாடு என்பது உள்ளுறை உவமம் போலவும் இறைச்சிப் பொருள்போலவும் நோக்கு முதலாய செய்யுள் உறுப்புக்கள் போலவும் அரிதின் உணருமாறு அமையாமல் எளிதின் விளங்குமாறு அமைதல் வேண்டுமென்பர். |
"உய்த்துணர்வின்றி மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்" |
என்றார். ஒரு செய்யுளுள் பல்வேறு மெய்ப்பாடுகட்குரிய அடிப்படைகள் அமைந்திருப்பின் அவற்றுள் தலைமைப்பாடுடைய பொருள்பற்றி இஃது இன்ன மெய்ப்பாடு என அறிதல் வேண்டுமென்பார். |
"தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்" என்றும் விளங்க ஓதினார். அஃதாவது |
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை |
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு |
(குறள்-1081) |
என்னும் செய்யுள், தகையணங்குறுத்தல் என்னும் அகத்திணைக் களவுப் பகுதிக்கண் தலைவன் கூற்றாக வந்ததாகும். |
இதன்துறை; காட்சியும் ஐயமும் தெளிவும் பற்றியதாகும். தலைவன் கூற்றின்கண் அமைந்திருக்கும் பொருட்பாடு ஐயம். ஐயமென்பது புறத்திணைக்குரிய மெய்ப்பாட்டுப் பொருள்களுள் |