மெய்ப்பாட்டியல்

ஒன்று.    (அகத்திணைக்கண்    ஐயஞ்   செய்தல்   என்னும்   பொருள்
தலைவிக்குரியதாகும்)    எனினும்    புலவர்   ஈண்டு   முடித்துக்காட்டும்
மெய்ப்பாடு   புதுமை   பற்றி   வந்த   மருட்கையாகும்.  மற்று  "மாலும்
என்நெஞ்சு" எனத்தலைவன் கூறலான் "மயக்கம்" என்னும் மெய்ப்பாடெனல்
ஆகாதோ எனின், ஆகாது. என்னை? மாலும்  என்பது  ஐயத்தைச் சார்ந்து
மருட்கைக்கு அடிப்படையாக நிற்றலின் என்க.
 

இனித், தொல்காப்பியனார் இந்நூலைச் செய்தருளிய காலத்துத் தமிழிசை
நூல்களும்,   தமிழ்நாடக   நூல்களும்   பல்கியிருந்திருத்தல்   வேண்டும்
என்பதனை,
 

"இசையொடு சிவணிய நரம்பின் மறை"

(எழுத் - 33)
 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

(அகத்-56)
 

எனவரும்   குறிப்புக்களானும்,    கலிப்பா,   பரிபாட்டு   ஆகியவற்றிற்கு
இலக்கணங்  கூறுமிடத்து  வரும்  குறிப்புக்களானும்  அறியலாம்.  மேலும்
பொருளிலக்கணத்துள் வரும் மாந்தருள் பாணர், கூத்தர், பொருநர், பாடினி,
விறலி என்போர் பெரும்பான்மையராகக் குறிக்கப்படுதலின்  இசைத்துறை -
நாடகத்துறைகள் பொதுவியலும் வேத்தியலுமாகப்  பரந்து  வழங்கியிருத்தல்
வேண்டுமென்பதை அறியலாம். அந்நூல்கள்  யாவும்  இற்றைக்குக்  காணக்
கிடையாமையால் அவைபற்றித் தொல்காப்பியம் கூறும்  கருத்துக்கள் இனிது
புலனாகாதுள்ளன.
 

எனினும் தலைச்சங்ககாலத்தே வேந்தரானும்  நல்லிசைப் புலவோரானும்
தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவாகத் தொடர்பு மொழியாக உருவாக்கப்
பெற்ற சமற்கிருதம் என்னும் வட  மொழியுள்,  பண்டைய  தமிழ்நூல்களை
அடிப்படையாகக் கொண்டெழுந்த நூல்கள்  இத்துறையில்  இருப்பவற்றைத்
துணைக்கொண்டு      இடைக்கால     இலக்கண     நூலாசிரியன்மாரும்
உரையாசிரியன்மாரும் நூலும் உரையும் செய்து  போந்தனர்.  சுவையுணர்வு
மன்பதைக்கெல்லாம் பொதுவாகலின்,  நாடகச்  சுவை  பற்றிய  இலக்கணம்
உலகமொழிகட்கெல்லாம்    ஓரளவு    பொதுவாக    அமைந்திருத்தலைக்
காணலாம்.
 

முத்தமிழுள்  இயற்றமிழுக்குரிய  மெய்ப்பாடு  என்னும்  செய்யுளுறுப்பு,
நாடகத் தமிழுக்குரிய சுவை உறுப்பொடு  தொடர்புடையதாகலின் ஆசிரியர்
நாடக  நூலார்  கூறும்  சுவை  பற்றிய  கோட்பாடுகளை  ஒப்புமை  பற்றி
இவ்வியலுள்   முதற்கண்   எடுத்துக்கூறிப்   பின்னர்   இயற்றமிழுக்குரிய
மெய்ப்பாட்டியல்புகளைப் பொதுவும் சிறப்புமாக வகுத்து ஓதுகின்றார்.