வாழ்த்துரை |
வாளமர்கோட்டை, திருப்பணிச்செல்வர் |
தவத்திரு காத்தையா சுவாமிகள் |
என் அன்பிற்குரிய பாவலரேறு பாலசுந்தரம் எழுதியுள்ள தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிக்காண்டிகை உரையின் இரண்டாம் பாகமாகக், களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் ஆகிய ஐந்தியல்கள் இறையருளால் வந்துள்ளன. மூன்றாம் பாகமும் விரைவாக வரும். பாலசுந்தரத்தின் இத் தமிழ்ப்பணி தமிழ்த்தாயின் பேரருளுக்குரிய சிறப்புடையதாகும். தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற தமிழ் இலக்கணநூல். அதன் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரம் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புடையது என்பது தமிழறிஞர் யாவரும் அறிவர். பண்டைத் தமிழ்ப் பெருமக்களின் வாழ்வையும் குறிக்கோளையும் கலைஞானத்தையும் அதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.அந்த முறையில் தமிழரின் பண்பாட்டு வரலாறாகத் திகழ்கின்றது என்பது சான்றோர்களின் கருத்தாகும். பழைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்பெறாத பல அரிய செய்திகளை இக்காண்டிகையுரையில் காணலாம் என்று தமிழ் இலக்கணப் பேரறிஞர் திரு. தி.வே. கோபாலையர் அவர்கள தமது ஆய்வு முன்னுரையில் கூறுகின்றார். அப்பெரும்புலவரின் கூற்றில் உள்ள உண்மையைத் தமிழ் வழிவந்த பேராசிரியர்களும் மாணாக்கர்களும் கண்டு தெளியவேண்டுவது கடப்பாடாகும். இவ்வுரையாசிரியர் மேலும் பல ஆய்வுநூல்களை வரைந்து தமிழுக்கு அணிசேர்க்கப் பல்லாண்டுகள் எல்லாவளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல சவுந்தரநாயகியுடனுறையும் சுந்தரேசப்பொருமான் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறேன். வாழ்க! |
செ. காத்தையா |
திரு. உலக சுப்ரமணியன், இ. ஆ. ப. (ஓ) தஞ்சாவூர் |
[தஞ்சை சால்பக நிறுவனர், தமிழ்ச் சங்கத் தலைவர்] |
இறைவன் திருவருளால் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்களின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிக் காண்டிகை உரையின் இரண்டாம் பகுதியைப் படித்து மகிழ்ந்தேன். முதல் பகுதியைப் போன்றே பொருள் விளக்கங்கள் |