264மெய்ப்பாட்டியல்
சூ. 250 :

பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப

(1)
 

சூ. 251 :

நாலிரண் டாகும் பாலுமா ருண்டே 
(2)
 

குறிப்பு : பொருளியைபு கருதி  இரண்டு  சூத்திரங்களுக்கும்  பொருள்
ஒருங்கு கூறப்பெறுகின்றது.
 

க - து :

நாடகநூலார் கூறும் சுவையினது விரியும்  வகையும் தொகையும்
இவை என்கின்றன.
 

பொருள் : அவினயக் கூத்தும் பொருநர்  கூத்தும்  என  இருதிறனாக
நிகழும்  நாடக  வழக்கின்கண்  அமைந்துள்ள  சுவையினது  விரிபொருள்
முப்பத்திரண்டும்  கட்புலனாதற்குப்  பொருந்திய  புறநிலையான்  பதினாறு
எனக் கூறுவர் நாடக நூலார். அவற்றைத் தொகுத்துக்காண  அவை  எட்டு
என்னும் பகுதியாதலும் உண்டு.
 

'பண்ணை' என்பது விளையாட்டு.  விளையாட்டாவது  அறிவின்பப்  பயன்
விளைக்கும் ஆடலாகும். வீணாட்டு என்பது  இதன்  எதிர்மறை.  ஆடுதல்
செயலுறுதல். நாவசைத்தலான் பேச்சு  நிகழ்தலின்  பேசுதலை  உரையாட்டு
என்பது   வழக்கு.   எனவே,   உடம்பாலும்   நாவாலும்  ஒரு  பொருள்
விளையுமாறு நிகழும் ஆடல் விளையாட்டென்பது போதரும்.
 

வெறியாட்டு,  களியாட்டு,  உண்டாட்டு  என்பவை  உடம்பு  பற்றியன.
பாராட்டு, சீராட்டு, கோதாட்டு  என்பன  உரை  பற்றியன.  கொண்டாட்டு,
திண்டாட்டு என்பவை உள்ளம் பற்றித் தோன்றி  உடம்பானும் உரையானும்
வெளிப்பாடாவன. ஈண்டு அவையாவும்  தொகுதியாக  அடங்கி  நிற்றலின்
பண்ணை எனப்பட்டது. பண்ணுதல் பண்ணையாயிற்று.
 

"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு"   (உரி-21)   என்பது
உரியியற் சூத்திரம்.  அதனால்  பண்ணை  என்பது  பெயர்ப்  போலியாய்
உரிச்சொல்லாக நிகழுமிடத்து அதன் பொருள் விளையாட்டென்பதாகும்.
 

மற்றைய வினைகள் கெடவருதலின் விளையாட்டிற்குக் 'கெடவரல்'
என்பதும்   ஒரு    குறியீடாயிற்று.   இதுவும்    உரிச்சொல்   நிலையில் இப்பொருளினதாகும்.   சிற்றில்   இழைத்தல்    முதலியவை   கெடவரல்
என்பதற்கு   ஏற்கும்.   (இவை  பெயர்வினைகட்கு  அடியாக  வருதற்கண்
பொருள் வேறுபடும் என்பதை உரியியல் உரை நோக்கி அறிந்து கொள்க)