மெய்ப்பாட்டியல்

எண்ணான்கு, நானான்கு, நாலிரண்டு என்பவை  சுவைப்  பொருளையும்
சுவையையும் உணர்த்தி நிற்றலின் இவை எண்ணலளவை ஆகுபெயர்களாம்.
இவற்றை   மெய்ப்பாட்டியலின்கண்   வைத்து   ஓதுகின்றமையான்  இவை
சுவைபற்றியவை என்பது சார்பான் புலப்படும்.
 

எண்ணான்கு பொருளாவன : வீரம்,  அச்சம்,  வியப்பு,  இழிபு, காமம்,
அவலம், நகை, வெகுளி என்னும்  எட்டுக்குணங்களும்;  சுவைப்பொருளும்,
சுவைப்போனும்,    சுவைப்போனது     சுவையுணர்வும்,    சுவைத்தோன்
வெளிப்படுத்தும் விறலும் (சத்துவமும்) ஆகிய நான்கனொடும்  உறழ்தலான்
வருவனவாம்.
 

சுவை வெளிப்பாட்டினை விறல் என்னும் தமிழ்ச் சொல்லானும், சத்துவம்
என்னும்  வடசொல்லானும்   வழங்குப.  ஒரு  பொருளைச்  சுவைத்தவன்
வெளிப்படுத்தும்  விறல்   காண்போரிடத்து  எழுப்பும்   அவ்வுணர்ச்சியே
நாடகநூலார்  கூறும்  சுவை  (ரசம்)  யாகும்.  இச்சூத்திரங்களான்   தமிழ்
நாடகநூலார் கொண்ட சுவை எட்டு என்பதும் புலப்படும்.
 

வடநூலார் 'சாந்தம்' என்பதைனைக் கூட்டி  ஒன்பது  (நவரசம்)  என்ப.
அவர்   கூறும்   ஒன்பதாவன:-  வீரம்  பயாநகம்,  அற்புதம்,  பீபத்ஸம்,
சிருங்காரம், கருணா, ஹாஸ்யம், ருத்திரம்,  சாந்தம்  என்பனவாம்.  மற்றும்
ஒரு  சாரார்   வாத்ஸல்யம்,  (அன்பு)  லௌல்யம்  (பொருளாசை)  பக்தி
(பேரன்பு) ஆகியவற்றைக் கூட்டிப் பன்னிரண்டாகக் கொள்வர்.
 

இனி  நானான்காவன : சுவைப்பொருளையும்  சுவைப்போனையும்  ஒரு
கூறாகவும் சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலையும்
ஒரு  கூறாகவும்  தொகுத்துக்  கொள்வதனான்  வருவனவாம்.  காரணம் :
சுவைத்தோன்  சுவைத்த   பொருளும்,  சுவைத்தோனது  உள்ளஉணர்வும்
அரங்கின்கண்   அமர்ந்து    காண்போர்க்குத்   தெற்றெனப்புலப்படாமல்,
சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விறலுமே  புலப்படுதலின்  என்க.
அதனால் தெற்றெனப் புலப்படுமவற்றைக் "கண்ணியபுறன்"  என  விளங்கக்
கூறினார்.
 

நாலிரண்டாகும் பாலாவது;  சுவைத்தோன்   வெளிப்படுத்திய  விறல்
அரங்கின்கண்  இருந்து   காண்போர்  உணர்வோடு  பொருந்தி  நிற்பதே
சுவையாமாதலின் நாடகக்காட்சியைக்கண்டு சுவைப்போரை  அடிப்படையாக
வைத்து  நோக்குங்கால்  அவை  பதினாறும்  எட்டாக  அடங்கிவிடுதலின்
எட்டாக நிற்றலாம்.