செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாடு பற்றிய இலக்கணங்கூற முற்பட்ட ஆசிரியர் நாடக நூலார் கூறும் சுவையினை ஈண்டுச் சுட்டுதற்குக் காரணம் என்னையெனின்? நகை முதலாய மெய்ப்பாடுகள் எட்டும் காட்சிஅளவையாகிய நாடகச் சுவைகளோடு தொடர்புடையவையாகலானும் நாடகச் சுவைகளாகிய வீரம், அச்சம், வியப்பு, இழிவு, காமம், அவலம். நகை, வெகுளி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே, முறையே பெருமிதம், அச்சம், மருட்கை, இளிவரல், உவகை, அழுகை, நகை, வெகுளி என்னும் மெய்ப்பாடுகள் அமைக்கப்பட்டன என்பது புலனாக வேண்டுதலானும் நாடகத் தமிழுக்குரிய சுவைகளே இயற்றமிழாகிய செய்யுட்கண் பொருள் புலப்பாடு செய்யும் மெய்ப்பாடென்னும் உறுப்பாக அமைகின்றன என்பதை உணர்த்த வேண்டுதலானும் என்க. |
மற்றுப் புறத்திணை ஒழுகலாற்றிற்குரிய அந்தணர், அரசர் முதலாய உறுப்பினரையும் அகத்திணை ஒழுகலாற்றிற்குரிய தலைவன், தலைவி, தோழி முதலாய உறுப்பினரையும் அமைத்துச் செய்யுள் செய்யும் புலவோர் தம் கூற்றாகவும் அவ்வுறுப்பினர் கூற்றாகவும் செய்யுளைப் புனைந்துரைக்குமிடத்துப் பொருளை விளக்கும் திணையுணர் வகையாகிய உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் தோன்றி வருமாறு பற்றி உவமவியலுள்; ஒருவன் ஒரு பொருளை உவமவாயிலாக விளக்க முற்படுதற்குக் காரணத்தை இருவகைப்படுத்துக் கூறுவார் ஆசிரியர். ஒன்று அப்பொருளிடத்து அமைந்துள்ள நிலைமை; மற்றொன்று அப்பொருளைப் பற்றித் தன்னுள்ளத்து எழும் உணர்வு; இவற்றுள் பொருளிடத்தமைந்துள்ள நிலையைச் |