"சிறப்பே நலனே காதல் வலியொடு |
அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப" எனவும் |
"கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்" எனவும் கூறுவார். |
அப்பொருளைப்பற்றித் தன் உள்ளத்து எழும் உணர்வென்பது அப்பொருள் எழுப்பிய சுவையாதலின் எண்வகைச் சுவையும் நிலைக்களமாக அமையும் என்பார். "நாலிரண் டாகும் பாலுமா ருண்டே" எனக் கூறுவார். |
அச்சூத்திரங்களின் பொருள் திரிபின்றி விளங்குதற் பொருட்டு ஈண்டுப் பிறன்கோட்கூறல் என்னும் உத்திவகையான் நாடகத் தமிழ்நூலார் கூறும் சுவையின் வகை தொகைகளைக் கூறினார் என அறிக. பிற விளக்கங்களை உவமவியலுரையுட் கூறுதும். |
இனி, இவ்விரண்டு சூத்திரங்கட்கும் உரையாசிரியரும் பேராசிரியரும் பெரும்பான்மையும் வடமொழி நாடக நூலைத் தழுவி உரைவிளக்கங்கூறிச் சென்றுள்ளனர். நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் மேல்வரும் மெய்ப்பாடுகளைத் தொகுத்துக் கூறுவதாக உரை செய்துள்ளார். பாரதியார் கருத்து நூல் நெறிக்கு ஒவ்வுமாறில்லை. பிறவிளக்கங்களை மேல்வரும் உரைகளொடு ஒப்பிட்டறிந்து கொள்க. |
மெய்ப்பாடு நாடகச் சுவையொடு தொடர்புடையது என்பதை உணர்த்த இவ்விரண்டு சூத்திரங்களையும் பிறன்கோட்கூறல் என்னும் உத்திவகையாற் கூறி இனி இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாடு பற்றிக் கூறுகின்றார். |
சூ. 252 : | நகையே அழுகை இளிவரல் மருட்கை |
| அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று |
| அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப |
(3) |
க - து : | தமிழியலார் கூறும் செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாடுகளின் பெயரும் தொகையும் கூறுகின்றது. |
பொருள் : மெய்ப்பாடாவன நகையும், அழுகையும், இளிவரலும், மருட்கையும், அச்சமும், பெருமிதமும், வெகுளியும், உவகையும் என்று சொல்லப்பட்ட அப்பகுதி எட்டே எனக்கூறுவர் புலவர். |
நகையே என்பது எண்ணேகாரம். எட்டே என்பது தேற்றேகாரம். அப்பால் என்றது நகை முதலாகப் பகுத்தவற்றை. இக்குறியீடுகளும் தொகையும் தொல்லோர் வகுத்தவை என்பது தோன்ற "என்ப" என்றார். |