270மெய்ப்பாட்டியல்

அழுகையொடு   இயைபுடைமையானும்   இளநிலை   அறிவு   காரணமாக எய்துதலானும் இளிவரல்  அதன்பின்  வைக்கப்பட்டது.  நிரம்பா  அறிவும்
ஆய்விலா   நிலையும்  பற்றி  வருதலின்  இளநிலை  அறிவான்  எய்தும்
இளிவரலுக்குப்பின்   மருட்கை   வைக்கப்பட்டது.   தளர்நிலை   அறிவும்
மெலிநிலை உள்ளமும் காரணமாக  வரும்  அச்சம்  ஆய்விலா  அறிவான்
வரும்  மருட்கைப்பின்  வைக்கப்பட்டது.  அச்சத்திற்கு  மறுதலையாகலின்
பெருமிதம்  அதன்பின்   வைக்கப்பட்டது.  பெருமிதத்திற்கு  வரும்  ஊறு
காரணமாக   வரும்  வெகுளி   அதன்பின்  வைக்கப்பட்டது.  யாவரானும்
விரும்பப்படுதலானும் அறிவானும் ஆற்றலானும் நிரம்பி நிற்றலானும் உவகை
இறுதிக்கண் வைக்கப்பட்டது.
 

அன்றிச்   சான்றோர்   செய்யுட்களுள்   ஒன்றின்   ஒன்று   மிக்குப்
பயின்றுவரும்  சிறப்பு  நோக்கி  வைக்கப்பட்டன;  எனினும்  தொல்லோர்
அமைத்தமுறை எனினுமாம்.
 

பேராசிரியர்  இளிவரலுக்குப்பின்  மருட்கையும்  அதன்பின்  அச்சமும்
வைக்கப்பட்டமைக்குக் கூறும் காரணம் நிறைவு தருவதாக  இல்லை.  மற்று
இவற்றைச் சுவை  என  வழங்கினும்  அமையும்  என்பார்  அவர்.  சுவை
நாடகத்தமிழுக்குரியது.    மெய்ப்பாடு     இயற்றமிழுக்குரியது    என்பது
மேல்விளக்கப் பட்டமையான் அது பொருந்தாமை புலனாகும்.
 

இனி,   இவ்    எண்வகை     மெய்ப்பாடுகளும்    தோன்றுதற்குரிய
அடிப்படைப்பொருகள்    பலவாயினும்    அவற்றுள்   அகத்திணைக்கும்
புறத்திணைக்கும்      பொருதுவனவாய்ச்     சிறப்பாக     வருவனவாய்
உள்ளவற்றைத் தொகுத்து  ஒவ்வொன்றற்கும் நான்கு நான்கு பொருள்களை
விதந்து கூறுகின்றார்.
 

சூ. 253 :

எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகைநான் கென்ப

(4)
 

க - து :

எள்ளல்  முதலிய  நான்கு  பொருள்  பற்றி   நகை  என்னும்
மெய்ப்பாடு தோன்றும் என்கின்றது.
 

பொருள் : கருதப்பட்ட நகை என்னும் மெய்பாட்டிற்குக்  காரணமாகிய
பொருள்  எள்ளல்,  இளமை,  பேதைமை,  மடன்  ஆகிய  நான்குமெனக்
கூறுவர் புலவர்.
 

1. எள்ளலாவது :   பழிப்பின்றிக்    களிப்பிற்கூறும்    அசதி.    இது
பெரும்பான்மையும் உரைபற்றி நிகழும். இது  தன்கண்ணும்  பிறன்கண்ணும்
என இருபாலும் பற்றி வரும்.