சுருங்கக்கூறின் பல புதிய கோணங்களில்   ஆராய்ந்து   வரையப்பட்ட
மெய்ப்பாட்டியற்  காண்டிகையுரை  முன்னை   உரைகளைவிடச்   செய்திச்
செறிவும் சொற்பொருள் விளக்கமும் பெற்றுச் சிறப்பாக   அமைந்துள்ளமை
கூர்ந்து நோக்கிச் சுவைத்தற்பாலது.
 

உவமவியல்  உவமவியலின்   காண்டிகையுரை  ஏனைய   இயல்களின்
உரைபோலவே நுண்ணிய செய்திகள் பலவற்றையும் உட்கொண்டு அமைந்து
இன்றைய நன்மக்களுக்குத் தன் தேவையை வெளிப்படுத்தியுள்ளது.
 

இவ்வியலுக்கு   வரையப்பட்டுள்ள   பாயிரப்பகுதி உவமத்தின் ஆற்றல்
செய்யுளுக்கு    இணையாக      உவமம்       போற்றிக்கொள்ளப்பட்ட
திறன்-உவமம்   சுவைகளையும்   நிலைக்களனாகக்   கொண்டு தோன்றும்
செய்தி - பின்னவர்   வடமொழி     மரபினைப்    பின்பற்றி   உவமம்,
மெய்ப்பாடு, குறிப்புமொழி, பொருள்கோள்  முதலியவற்றை   அணிகளாகக்
கொண்ட    செய்தி  -   உள்ளுறையுவமம்,     ஏனையுவமம்     என்ற
பொருளிலக்கணப்   பகுதியை    அணியிலக்கணமாகக்   கருதும் மயக்கம், தொல்காப்பியனார்   உவமத்தைப்     பொருளிலக்கணத்தின்      சிறந்த
கூறாக அமைத்து யாத்த நூற்பாக்கள் - உவமம்  என்பது உவமானத்தையும்
உவமை  என்பது   பொதுத்தன்மையையும்   விளக்கும்   என்ற   செய்தி
விளக்கம். உவமப்பொருள்   உவமத்தன்மை   உவமச்சொல் மூன்றனையும்
ஆசிரியர் உவமம் என்றே  குறிப்பிடும்    திறம்   மெய்ப்பாடு   செய்யுள்
உறுப்பு, உவமம்   திணையுணர்   வகை   என்ற  செய்திகளின் விளக்கம்,
அகத்திணை மாந்தர்தம்  கூற்றுக்களின் அடிப்படையில் உவம  இலக்கணம்
அமைய,   மெய்ப்பாடு   அதற்குத்   துணையாகவும்   நிலைக்களமாகவும்
அமைவது  என்பதற்கு   மேற்கோள்  இவ்வியலிற் கூறப்படும் செய்திகள் -
என்பன இவ்வுரைப் பாயிர உரையில் காணப்படும் நுட்பமான செய்திகள்.
 

உவமமாவது ஒருவர்  ஒருபொருளைத் தெளிவாகப் புலப்படுத்தக் கருதி
அப்பொருளின் தன்மையை நன்கு   பொருந்தியுள்ளதாகத்   தாம்   கருதி
மேற்கோளாகக் கொள்ளும் பொருளாம்.  இயல் என்பது  இலக்கணத்தையும்
ஓத்தினையும்  ஒருங்குணர்த்தி   நின்றது. என்பன   உவமம் - உவமவியல்
என்பன பற்றிய விளக்கமாம்.
 

நூ. 1.  வினை,   பயன்,  மெய்,  உரு   என்பனவற்றின்   விளக்கம் -
உருவுவமத்தில்  அடங்குவன - உவமம் வகையுற்று வருமாற்றிற்கு எடுத்துக்
காட்டுக்கள் ஆகியவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.