26. "தன்பார்ப்புத்     தின்னும்"        தலைவிஅறிகிளவி     எனல்
ஆராய்தற்குரியது. இக்கருத்து  அடுத்த  நூற்பாக்  கருத்தோடு  இணைத்து
நோக்கத்தக்கது.
 

28. இந்நூற்பா விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது.
 

29. இனிதுறு   கிளவியும்,   துனியுறு   கிளவியும் - இந்நூற்பா  உரை
வலிந்துரையாக இருப்பினும் பொருத்தமாக உளது.
 

31. 'ஈரிடம்' தலைவனும்  தோழியும்  என்ற  உரை  சிறப்பாக உள்ளது.
பேராசிரியர்    கூறிய      உரையின்     பொருத்தமின்மையும்   நன்கு விளக்கப்பட்டுள்ளது.
 

33. தோழி   உள்ளுறை   கூறப்   பொருந்தும்   இடங்களும் செவிலி உள்ளுறை கூறப் பொருந்தும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
 

34. 'வேறுபட  வந்த  உவமத்தோற்றம்'  உள்ளுறை  உவமத்தின் பின்
கூறப்பட்ட காரணம்   நுட்பமாக  உள்ளது.  இதன்  எடுத்துக்காட்டுக்களும்
சிறப்பாக உள்ளன.
 

37. தடுமாறுவமத்தின்கண் பலபொருளுவமங்கள்  குறிக்கப் பட்டிருக்கும்
செய்தி உரையாசிரியரை ஒட்டியுளது.  இஃது  இப்பொருளை  ஒக்கும்  என
வரையறுத்தற்கியலாமல்  சிலவும்   பலவுமாகத்   தடுமாறி  வரும்  உவமம்
என்று   தடுமாறுவமத்திற்கு  கூறும்பொருள்  ஆராய்தற்குரியது.   இதனை
இவர்கூறும் நிரல் நிறுத்தமைதற்கண் அடக்கலாம் என்று தோன்றுகின்றது.
 

38. நிரல் நிறுத்தமைத்தலே  நிரல்நிறையாகவும்  இளம்பூரணரை  ஒட்டி
இரண்டனையும்  வெவ்வேறாகக்  கொண்டுதம்  கருத்திற்கேற்பப்  பொருள்
கூறியுள்ளார். இடைப்பிறவரலை நீக்கி எச்சத்தையும்  எஞ்சு  பொருளையும் இணைத்து  உவமங்கோடற்குத்   தனி   நூற்பா    வேண்டுமா?  என்பது கருதத்தக்கது.  நிரல்   நிறுத்தமைத்த    நிரல்நிறை    என்றது   ஏனைய பொருள்கோள் மூன்றும் நிரல்நிறுத்தமையாமையான்  கொள்ளற்பால அல்ல
என்பதனுக்கு விளக்கமாக  அமைகிறது.  ஆதலின்  மிகைபடக்  கூறலன்று.
நிரல் படக்கூறும் உவமத்தோற்றம் வேறுபட  வந்த  உவமத்துள் அடங்கும்.
தடுமாறு வமம் என்பதனையடுத்து அடுக்கிய  தோற்றம் என்ற  தனி நூற்பா
அடுக்கிய தோற்ற உவமம்  நீக்கத்தக்கது என்று இனிது பொருள் தருவதால்
இந்நூற்பா உரை ஆராயத்தக்கது. மேலும்  தடுமாறுவமத்திற்கு இவர் கூறும்
விளக்கமே நிரல் நிறுத்தமைத்தலுக்கும் கூறப்பட்டுள்ளதும் உணரத்தக்கது.
 

புதிய    விளக்கங்களை    உட்கொண்டுள்ள    இவ்     உவமவியல் காண்டிகையுரை பெரிதும் பாராட்டிற்குரியது.
 

திரு. தி.வே.கோபாலையன்