பக்கம் எண் :

மெய்ப்பாட்டியல்

3. ஆண்மையாவது : ஆளுமைத்திறன். ஆண்தன்மை  வேறு; ஆளுதல்
தன்மைவேறு. இதன்  முதனிலை  உரிச்சொல்  "ஆள்". அதன்  முதனிலை
உரிச்சொல் 'ஆண்' என்று அறிக.
 

இயற்றலும்   ஈட்டலும்   தலைவற்கு  ஆளுமை. காத்தலும் வகுத்தலும்
தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க.
 

எ - டு :

அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் 

பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் 

புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் 

பிரிவெண்ணிப் பொருள்வயின் பிரிந்தநங் காதலர் 

வருவர் கொல்வயங் கிழாய்வலிப் பல்யான் 

(கலி-11)
 

இதன்கண் அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும்  தருமெனப் பொருள்வயிற்
பிரிந்தான் தலைவன் என்பதும், தலைவி வலிப்பல் யான் என்பதும் இருவர்
ஆளுமை ஒப்புமையைப் புலப்படுத்தி நின்றவாறு கண்டு கொள்க.
 

4. ஆண்டாவது :      அகவை.     அஃது    ஈண்டுப்   பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது.
 

அஃதாவது    தலைவற்குப்   பதினாறு      ஆண்டும்  தலைவிக்குப்
பன்னிரண்டாண்டும் நிரம்பி   நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம்
தலைவன்   அகவையிற் காற்கூறு   குறைதல்  ஒப்புமை யகவை (ஆண்டு)
என்றுணர்க.   இதனை  "மிக்கோ னாயினும்   கடிவரை   யின்றே"  எனக்
களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க.
 

எ - டு :

குன்றக் குறவன் காதன் மடமகள் 

வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி 

வளையள் முளைவா ளெயிற்றள் 

இளைய ளாயினும் ஆரணங் கினளே 

(ஐங்-256)
 

இதன்கண்   வளையள் - எயிற்றள்  என்பவற்றான்  தலைவி பருவமும்
ஆரணங்கினள்    என்று    கூறியதனான்   தான்    அணங்கப்பட்டமை
புலப்படுத்தினானாகலின் தலைவன் பருவமும் ஒத்துள்ளமை புலப்படும்.
 

5. உருவாவது : வனப்பு.   அஃதாவது  தோற்றமும்  எழிலும் ஏற்றமுற
விளங்கும் நிலை.
 

எ - டு : 

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் 

அஞ்சில் லோதி அனநடைக் கொடிச்சி