| கண்போல் மலர்தலும் அரிதவள் |
| தன்போற் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே |
(ஐங்-299) |
எனவரும். இதன்கண் தலைவியின் கண் மலர்ந்தது எனக் கூறியதனான் தலைவன் எழிலுடைமையும் விளங்கும். |
6. நிறுத்த காமவாயிலாவது : நிலைபேறுடைய காம ஒழுக்கத்திற்குரிய உள்ளக்கிளர்ச்சி. |
எ - டு : | ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் |
| நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே |
| இனையளென் றவட்புனையள வறியேன் |
| சிலமெல் லியவே கிளவி |
| அணைமெல் லியல்யான் முயங்குங் காலே |
(குறு-70) |
நறுந்தண்ணீரள் என்பதனால் தலைவனது உள்ளக்கிளர்ச்சியும் சிலமெல்லியவே கிளவி என்பதனால் தலைவியின் உள்ளக் கிளர்ச்சியும் ஒருங்கொத்தமைந்தமை கண்டு கொள்க. |
அன்பு எனப்பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது யாவர்க்கும் வேண்டும் பொதுக்குணமாகலின் ஈண்டைக்குச் சிறவாமையறிக. |
7. நிறையாவது : சால்பு. அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்துதல். |
எ - டு : | யாயா கியளே மாஅ யோளே |
| மடைமாண் செப்பின் தமிய வைகிய |
| பெய்யாப் பூவின் மெய்சா யினளே |
| பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் |
| இனமீ னிருங்கழி ஓதம் மல்குதொறும் |
| கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
| தண்ணந் துறைவன் கொடுமை |
| நம்முன் நாணிக் கரப்பா டும்மே |
(குறு-9) |
இது தலைமகள் நிறை. |
வல்லாரை வழிபட்டொன் றறிந்தான் போல |
நல்லார்கட் டோன்றும் அடக்கமு முடையன் |
(கலி-47) |
என்பது தலைமகன் நிறை. |
8. அருளாவது ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி. அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்பு வேறென அறிக. |