செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கு என வகுத்துக் கூறுவதனான் அவை யாவும் எல்லாச் செய்யுட்கண்ணும் அமைந்து வருமென்றோ அமைந்துள்ளன என்றோ கருதுதல் எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறே அகத்திணை மரபுகளாகக் கூறப்பெறும் இலக்கணங்கள் யாவும் அகத்திணை மாந்தராக வரும் யாவர்க்கும் உரியவெனக் கோடலும் பொருந்தாததாகும். செய்யுளியல் விதிகளுள் எழுவகைச் செய்யுட்கும் பொதுவானவற்றையும் வெண்பா முதலிய பாக்களுக்குச் சிறப்பானவற்றையும் பகுத்துணர்ந்து கொள்ளுமாறு போலவும் கலிப்பா உறுப்புக்களுள் இன்ன இன்ன உறுப்புக்களான் வருவன இன்ன இன்ன கலிப்பா என அறிந்து கொள்ளுமாறு போலவும் அகத்திணை ஒழுகலாறு பற்றிய மரபுகளையும் தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி முதலிய அகத்திணை மாந்தர் மரபுகளையும் இயற்கைப் புணர்ச்சி முதலாய இலக்கணங்களையும் ஓதல் முதலாய பிரிவுகளையும், மெய்ப்பாட்டுப் பொருள்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும். |