334மெய்ப்பாட்டியல்

க - து :

உலகியலால்   பல்வேறிடங்களில்     பல்வேறு    மக்களிடத்து
அரியவும்   பெரியவுமாக  நிகழும் ஒழுகலாறுகளைத்  தொகுத்து
நான்மறைப்  பயன்கருதி   நல்லிசைப்புலவோரான்  செய்யப்படும்
செய்யுள்  வழக்கிற்கு  ஏற்பன  கொண்டு  ஏலாதனவற்றை  நீக்கி
நூலோரான் அமைக்கப்  பெற்ற நாடக   வழக்கினும்   உலகியல்
வழக்கினும்      பாடல்     சான்ற    புலனெறி   வழக்காகிய
அகத்திணைக்கண், சுட்டி ஒருவர் பெயர் பற்றாமல் எஞ்ஞான்றும்
ஒரு   நிலையினராக அமைத்து    ஓதப்பெறும்   தலைமக்கட்கு
உரியவாக வரையப்பெற்ற  புகுமுகம்புரிதல் முதலாய பொருள்கள்
யாவும் மக்களின்பால் ஆங்காங்கே நிகழ்வனவேயாகும். ஆதலின்
அவற்றிற்கு   அடிப்படையாகக்   கூறப்பெற்ற   பிறப்பு முதலாய
சால்புகளேயன்றிச்    சாலாத  பிற   குணங்களும்  செயல்களும்
மக்கள்பால்   அமைந்து   கிடத்தல்  இயற்கையாதலின்  அவை
பற்றியும்    மெய்ப்பாடுகள்      தோன்றுமன்றே?   அவ்வழிச்
சாலாதபண்பும்    செயலுமாயவற்றுள்    ஒருசார்   பொருள்கள்
அகனைந்திணைக்குரிய தலைமக்கட்கு ஒவ்வாமையான நல்லிசைப்
புலவோர்  செய்யுள்  யாக்குமிடத்து   அவற்றைத்    தவிர்த்தல்
வேண்டுமென்பாராய்  ஆசிரியர்   இச்சூத்திரத்தான்  இன்னவை
இன்மை வேண்டுமென விதிக்கின்றார்.
 

பொருள் : நிம்பிரி    முதலாக     ஒப்புமை   யீறாகக்  கூறப்பெற்ற
பத்துப்  பொருளும்  மெய்ப்பாட்டுப்  பொருளாதற்கு  இன்மை  வேண்டும்
எனக் கூறுவர் புலவர்.
 

1. நிம்பிரியாவது :   நேயமின்மை.   அஃதாவது  வெறுப்பு.  இச்சொல்
நேம்-பிரி (நேம் - நசை.  பிரி  -  பிரிதல்  -  நீங்குதல்)   என்னும் இரு உரியடிகளான் அமைந்ததொரு திரிசொல்லாகும்.
 

இதற்குப்  பொறாமை  -  அஃதாவது பொறுத்தலின்மை எனப் பொருள்
கொள்வர் உரையாசிரியன்மார். இளம்பூரணர் வெறுப்பு  என்னும் பொருளே கொண்டனர்.
 

இஃது  ஒன்றனைச்  சிறப்பிக்குங் குறிப்பொடு கூறுதற்கண் வருவதற்கும்
ஏற்கும்  எனப்  பொருளியலுள்  ஆசிரியர் "சினனே  பேதைமை  நிம்பிரி
நல்குரவு அனைநால்  வகையும்  சிறப்பொடு  வருமே"  (பொரு-51)  எனக்
கூறியுள்ளமையான் அறிக.
 

2. கொடுமையாவது :   இரக்கமின்மை.     அஃதாவது   சொல்லானும் செயலானும் உயிர் நடுங்கும் வகை துன்புசூழ்தல்.
 

3. வியப்பாவது : தமது   வனப்பும்  வளமும்  சிறந்தவையாகக் கருதித்
தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டொழுகுதல்.
 

வியத்தல் - புகழ்தல்.   இதனைப்    பெரியோரை    வியத்தலுமிலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே (புறம்-192) என்பதனானறிக.