4. புறமொழியாவது : தமது உள்ளத்தும் இல்லத்தும் நிகழ்வனவற்றைப் புறத்தார்க்குப் புலனாமாறு பேசுதல். இது குலனுடையார்க்கு ஒவ்வாத செயலாகலின் விலக்கப்பட்டது. |
இதற்குப் புறங்கூறுதல் எனப்பொருள் காண்பார். அஃது எல்லோர்க்கும் பொதுவாக விலக்கப்பட்டுள்ள குணமாதலின் காதலர்க்குச் சிறந்துரிமையாகாமை உணர்க. |
5. வன்சொல்லாவது : குடிமைக்கொவ்வாத கடுஞ்சொற்களைக் கிளத்தல். அஃது அன்பினைத் தேய்க்கும் அரமாதலின் விலக்கப்பட்டது. |
இன்சொல், வாய்ச்சொல் என்பவை தலைமகற்கும், மென்மொழி, சின்மொழி, பணிமொழி, கனிமொழி, தேமொழி என்பவை தலைமகட்கும் உரியவாகச் சான்றோர் ஓதுதலையறிக. இவற்றிற்கு மாறுபட்டது வன்சொல் என்க. |
6. பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால் கடைப்பிடியின்றி நெகிழ்ந்து விடுதல். இது நிறுத்த காமவாயிற்கு ஊறு செய்வதாகலின் விலக்கப்பட்டது. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் ஒக்கும். |
7. மடிமமையாவது : கடப்பாடாவனவற்றைக் காலத்தொடு புரியாமல், சோம்பியிருத்தல். இது காமச்செறிவிற்கு ஒவ்வாமையான் விலக்கப்பட்டது. |
8. குடிமையின்புறலாவது : தத்தம் குடிமைச் சிறப்பினை உயர்வாக எண்ணிச் செருக்கிக் களித்தல். இது மற்றவர் குடிமையை இகழும் குறிப்பாக அமைதலின் காதலுணர்வைச் சிதைக்கும் என விலக்கப்பட்டது. |
இதனை இரண்டாக எண்ணுவர் பேராசிரியர். இரண்டாயின் இரண்டும் வேண்டப்படும் பொருளாதலன்றி விலக்கப்பாட்டிற்கு ஒவ்வாமையறிக. இன்புறல் என்பதற்கு அவர் கூறும் பொருள் உடற்கூறு பற்றியதன்றிக் குணம் பற்றியதாகாமையும் அறிக. |
9. ஏழைமை மறப்பாவது : பணிவுடைமையை மறந்தொழுகுதல். ஈண்டுப் பணிவென்பது அன்பிற் கெளியராதல், மதிக்கத் தக்கார் மாட்டு மேலாளர் மாட்டும் தம்மை அடியேன், ஏழையேன், சிறியேன் எனப் பண்புடையோர் கூறிக் கொண்டொழுகும் வழக்கினைக் கண்டு கொள்க. |