மெய்ப்பாட்டியல்

குறிப்பானும் வெளிப்படையானும், மக்களிடத்து நிகழும் உரையாடல்களையும்
முறையே   கண்ணானும்  செவியானும்  தம்  நுண்மாண்  நுழைபுலத்தான்
ஓர்ந்து   திரிபின்றி    உணரும்  அறிவுடையார்க்கன்றி    ஆராயுமிடத்து
அவ்வுணர்வில்லா மாந்தர்க்கு மேற்கூறிய  நன்னயம் சான்ற மெய்ப்பாட்டுப்
பொருள்களையும்  அவை  பற்றி    எழும்  மெய்ப்பாடுகளையும்  எண்ணி
அறிந்து கோடல் அரிதாகும்.
 

என்றது :  பண்ணைத்    தோன்றிய      பொருள்பற்றி      நிகழும்
நாடகச்சுவையினை  உணரும்  கருவிகளும் அறிவுமே   செய்யுளுறுப்பாகிய
மெய்பாட்டினை உணர்ந்து கோடற்கும் மூலமாம் என்றவாறு.
 

நாடகக்   காட்சியின்கண்   ஒரு  பொருநன் வெளிப்படுத்தும் சத்துவம்
(விறல்) அவன் மெய் வாயிலாகவும் உரை  வாயிலாகவும் வெளிப்படுதலான்
அதனைக் காண்போன்  அச்சுவையைத்  தன்   கண்ணானும்  செவியானும்
கண்டும்  கேட்டும் எய்துவானன்றே  அங்ஙனம் காட்சிவகையான் உணர்ந்து
எய்தும் அவ்வறிவே   செய்யுளுறுப்பாகிய   மெய்ப்பாட்டினை   உணர்ந்து
கோடற்கும் கருவியாம் என்பதை   விளக்குதற் பொருட்டுக்   "கண்ணினும்
செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வு" என்றார்.
 

என்னை?   செய்யுட்கண்வரும்    நிகழ்ச்சிகள்   அகவிழிக்கும்  அகச் செவிக்கும்  புலனாகி  நிற்றலின்  என்க. பிற  விளக்கங்கள்  முன்னுரையிற்
கூறப்பெற்றன.
 

எ - டு :

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு 

(குறள்-1097)
 

என்னும்    தலைவன்     தலைவியின்       செறுத்த    நோக்கினூடே
அன்புண்மையைக்  கண்ணானும்   சிறுசொல்லின்கண்   காதலுண்மையைச்
செவியானும் தன் நுண்ணுணர்வான் நுண்ணிதின் அறிந்தமையான் இங்ஙனம்
கூறுவானாயினமை   தெரியலாம்.  தலைவன்  காணும்  காட்சியும்  அவன்
உணர்வும் இச்செய்யுளைப் பயில்வார்  தம்  அகவிழிக்குப்  புலனாதலையும்
அறியலாம்.
 

இது   நாடகக்   காட்சியாயின்   தலைவியிடமாகத்  தோன்றும் சுவை
பெருமிதமாம். இது தலைவன்  கூற்றாகலின் அவன்கண்  தோன்றும் சுவை
உவகையாம்.    இதனை     இலக்கியக்    காட்சியாகப்  பொருட்பாடாக
அறியுமிடத்துத் தலைவியைக் கருதுமிடத்து