இல்வலியுறுத்தல் என்னும் பொருள்பற்றி வந்த பெருமிதம் என்னும் மெய்ப்பாடாம். தலைவனைக் கருதுமிடத்துப் புலன் என்னும் பொருள்பற்றி வந்த உவகை என்னும் மெய்ப்பாடாம். |
இவையே கண்ணாற் காணும் நாடகக் காட்சிக்கும் அறிவாற் காணும் இலக்கியக் காட்சிக்கும் உரிய வேறுபாடாகும். |
இனி, இச்செய்யுட்குத் "தலைவரு பொருண்மையான்" முடிக்கப்படும் மெய்ப்பாடு யாது என நோக்குமிடத்து நன்னயப் பொருளைத் தலைவன் கூற்றாகப் புலவர் யாத்துள்ளமையான் தலைவனுடைய சுவைவழித்தோன்றும் மெய்ப்பாடாகிய உவகையே இதற்குரிய மெய்ப்பாடாதல் தெளியலாம். |
எனவே, இச்செய்யுளின் மெய்ப்பாடாகிய உறுப்பு, புலன் என்னும் பொருள் பற்றிவந்த உவகை என்பதாம். பிறவற்றையும் இவ்வாறே நாடகச் சுவையொடு ஒப்பிட்டு மெய்ப்பாட்டியல்பினை ஓர்ந்துணர்ந்து கொள்க. |
மெய்ப்பாட்டியல் உரை முற்றும். |