பொருளதிகாரம் |
ஏழாவது - உவமவியல் |
பாயிரவுரை: |
ஒரு பொருளை மொழி வாயிலாகப் புலப்படுத்தும் முறைகளுள் உவமம் நனி சிறப்புடையது. ஒருபொருளைக் கண்கூடாகக் காட்டுவதினும் அதனை உவமவாயிலாக எடுத்துக் கூறுவது வலியுடையது என்பதனான் சிறந்த புலமையும் பரந்த அறிவுமுடையார் தாம் அறிவுறுத்த விரும்பும் பொருளை உவமத்தாற் கூறுதலை மேற்கொண்டனர். உவமம் தான் கருதியாங்குப் பொருளைப் புலப்படுத்துவதோடு தன் அறிவாற்றலையும் பண்பாட்டினையும் நாகரிகத்தையும் உணர்வுகளையும் கேட்போர்க்குப் புலனாக்க வல்லதாகும். உவமத்தின் ஆற்றலையும் பயனையும் தேர்ந்துணர்ந்த தொன்னூலோர் அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகளைப் புலப்படுத்தும் செய்யுளுக்கு இணையாக உவமத்தைப் போற்றிக் கொள்வாராயினார். |
எழுவகைத் திணைகளையும் இருவகைக் கைகோளினையும் செய்யுளுறுப்பாகக் கூறிய தொல்காப்பியனார் தொல்லோர் தம் நெறி விளங்க, |
உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத் |
தள்ளா தாகும் திணையுணர் வகையே |
(அகத்-50) |
என உவமத்தினைப் பொருளைப் புலப்படுத்துங் கருவியாகக் கூறி அதன் இயல்புகளை வரைந்தோதுவாராயினார். |
உவமமானது செய்யுளொடு ஒருங்கிணைந்து, சிறப்புநலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுதலான் உவமவியலை மெய்ப்பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னுமாக அமைத்துக் கூறுகின்றார் ஆசிரியர். |
இடைக்காலத்தே இலக்கண நூல்களைச் செய்த ஆசிரியன்மார் மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய குறிப்புமொழிகளையும், பொருள் கோளையும் முரண், தொடை முதலியவற்றையும், நோக்கு முதலாய செய்யுளுறுப்புக்களையும் வேறுபடவந்த உவமத் தோற்றங்களையும் உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு அணி செய்வனவாகக் கொண்டு வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர். |