இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் |
உவம மருங்கிற் றோன்று மென்ப |
(உவம-36) |
என்றும் ஆசிரியர் கூறுமாற்றான் அறியலாம். அவ்வாற்றான் அகத்திணை மாந்தருள் உவமங் கூறுதற்குரியாரையும் அவர் கூறத்தகும் முறைமையையும் இவ்வுவமவியலுள் விளங்க விதிப்பாராயினார். |
இனி, இவ்வியலுள் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் ஏனையுவமத்திற்குரிய இலக்கணங்களை முதற்கண் கூறி, அகத்திணைக்குச் சிறப்பாக வரும் உவம இலக்கணங்களையும் உவமங் கூறுவதற்குரிய மாந்தரையும் அவர் கூறும் முறைமையையும் பின் கிளந்துகூறி இறுதியாக உவமம் பற்றிய சில பொதுவியல்புகளையும் புறனடையையும் தொகுத்து ஓதுகின்றார். |
உவமவியல் : திணையுணர் வகையாகிய உவமத்தின் இலக்கணங்களைத் தொகுத்துக் கூறலின் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று. |
உவமமாவது ஒருவர் ஒரு பொருளைத் தெளிவாகப் புலப்படுத்தக் கருத அப்பொருளின் தன்மையை நன்கு பொருந்தியுள்ளதாகத் தாம் கருதி மேற்கோளாகக் கொள்ளும் பொருளாம். இயல், என்பது இலக்கணத்தையும் படலத்தையும் ஒருங்குணர்த்தி நின்றது. |
சூ. 277 : | வினைபயன் மெய்உரு என்ற நான்கே |
| வகைபெற வந்த உவமத் தோற்றம் |
(1) |
க - து : | உவமத்தின் வகையும் தொகையும் கூறுமுகத்தான் அது வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறுகின்றது. |
பொருள் :வகை பெறுதலான் வந்த உவமத்தின் தோற்றமாவது வினையும் பயனும் மெய்யும் உருவும் என்று சொல்லப்பட்ட நான்காம். ஏகாரம் தேற்றம். என்றது, உவமத்தின் வெளிப்பாடு பொதுவகையான் இந்நான்கு வகைப்படும் என்றவாறு. |
வினையாவது : ஒருவினைமுதலின் தெரிநிலையும் குறிப்புமாக நிகழும் தொழிற்பாடு அல்லது செயற்பாடு. பயனாவது : ஒருவினைமுதலின் செயற்பாடு காரணமாக எய்தும் பயன்பாடு. மெய்யாவது : சினையும் முதலுமாக அறியப்படும் ஒரு பொருளின் வடிவு அல்லது பிழம்பு. உருவாவது : ஒரு பொருளின் வண்ணமும் குணமும் சுவையும் அளவும் பிறவுமாகிய பண்புகள். |
வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின்என்று |
அன்ன பிறவும் ...... ...... ....... பண்பு |
(சொல்-416) |