என்றதனான் வடிவும் பண்பாக அடங்குமால் எனின்? ஆண்டு வடிவென்றது ஒருபொருளின் பண்பாகக் கிடக்கும் நெடுமை குறுமை வட்டம் கோணம் முதலியவற்றையாம், ஈண்டு அப்பண்புகளையுடைய உறுப்போடு கூடிய பொருளை, அதனான் ஆசிரியர் வடிவென்னும் வாய்பாட்டாற் கூறாமல் 'மெய்' என்னும் குறியீட்டாற் கூறினார். ஆதலின் அடங்காதென்க. |
எ - டு : "அரிமா வன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன்" என்பது வினையுவமம். அரிமா அணங்குதலை ஒப்ப அணங்கும் தொழிலன் என்பதாம். |
"மழைவிழை தடக்கை வாய்வாளெவ்வி" என்பது பயனுவமம். (விழை - உவம உருபுச்சொல்) மழை துப்பார்க்குத் துப்பாய் வழங்குதல் ஒப்பத் துய்ப்பதற்கு உரியவற்றையெல்லாம் வழங்குங் கையன் என்பதாம். |
"வேய் மருள் பணைத்தோன்" என்பது மெய்யுவமம். (மருள் - உவம உருபுச்சொல்) வேய்திரண்டு சமனாக விளங்குதல் ஒப்பத் திரண்ட தோள் என்பதாம். ஈண்டு வேய் என்றது அதன் ஒருபகுதியை என்க. இஃது சினைக்குச்சினை வடிவுபற்றி வந்த மெய்யுவமம். |
"செந்தீ ஒட்டிய செஞ்சுடர்ப் பருதி" என்பது முதற்பொருட்கு முதற்பொருள் வடிவுபற்றி வந்த மெய்யுவமம். ஒட்டிய என்பது உவம உருபிடைச்சொல். |
"தாமரை புரையும் காமர் சேவடி" இது வண்ணம் பற்றி வந்த உருவுவமம். "தளிர்புரையும் திருமேனி" இது மென்மைத் தன்மை பற்றி வந்த உருவுவமம். "யாயையைவர் நட்பொரீஇ" என்பதும் அது. "பால்போலும் இன்சொல்" என்பது சுவைபற்றி வந்த உருவுவமம். "தெம்முனை யிடத்திற் சேயகொல் அம்மா அரிவை அவர்சென்ற நாடே" என்பது அளவு பற்றி வந்த உருவுவமம். [இன்-உவமஉருபுச்சொல்] |
வினைமுதலாய இந்நான்கும் பல திறப்பட்டு வருமென்பது தோன்ற "வகைபெறவந்த" என்றார். அஃதாவது |
"கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி" (கலி-51) என்பது கொல்லுவான் நோக்குதல் போல் நோக்கி என்றவாறு. |
"விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி |
மங்குல் மாமழை தென்புலம் படரும்" |
(அகம்-24) |