என்பது மங்குல் மாமழை விசும்புதோலுரிவது போல இயங்கி என்றவாறு. "கொன்றன்ன இன்னா செயினும்" என்பது கொன்றால் எய்தும் துயரன்ன இன்னா என்றவாறு. பிறவும் இவ்வாறு வகையுற்று வருமாற்றினை யெல்லாம் ஓர்ந்து கொள்க. |
சூ. 278 : | விரவுயும் வரூஉம் மரபின என்ப |
(2) |
க - து : | மேற்கூறிய நான்கும் பற்றியதோர் இயல்பு கூறுகின்றது. |
பொருள் :வினை, முதலாக மேற்கூறிய உவமப் பொருளின் தோற்றம் தனித்தனி வருதலேயன்றி ஒரு பொருளின்கண் இரண்டு முதலாக விரவியும் வரும் இலக்கணத்தன என்று கூறுவர் புலவர். |
விரவுதற் கொத்த பொருள் உவமமாக வருமிடத்தன்றி யாண்டும் எல்லாம் விரவிவாரா என்பது விளங்க 'விரவியும்' என்றார். உம்மையான் அவை தனித்தனி வருதலே பெரும்பான்மை என்பது புலனாம். |
எ - டு : | "செவ்வா னன்ன மேனி அவ்வான் |
| இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிறு" |
இதன்கண் 'செவ்வானன்ன மேனி' என்பது வண்ணமாகிய உருப்பற்றித் தனித்து வந்தது. 'விலங்குவால்வையெயிறு' என்பது வடிவும் உருவும் பற்றி விரவி வந்தது. "காந்தள் அணிமலர் நறுந்தா தூதும் தும்பி கையாடு வட்டிற் றோன்றும்" (அகம்-108) என்பது வினையும், மெய்யும் உருவும் பற்றி விரவி வந்தது. |
"மரபின" என்றதனான் ஒரு பொருளை விளக்கப் பல உவமங்கள் வருதலும் ஒன்றனது தன்மை பிறிதொன்றின்கண் விரவி வருதலும் பிறவும் கொள்ளப்படும். |
எ - டு : | "மாமலை யணைந்த கொண்மூப் போலவும் |
| தாய்முலை தழுவிய குழவி போலவும் |
| தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்" எனவும் |
| "ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத் |
| தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்" |
எனவும் ஒன்றற்குப் பல உவமம் வந்தன. இவற்றை நிரல்பட வந்த உவமத் தோற்றம் என்பார். பின்னர்த். |
"தேன் போலும் இனியமொழி" என்பது நாவிற்குரிய சுவை செவிக்கு ஏற்றிக் கூறப்பட்டது. பிறவும் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்துணர்ந்து கொள்க. |