யாகக் கொண்டு இலக்கியங்களை ஆக்கவும் கருவி என்பதைத் தெளிந்து இந்நூலைப் பயிலுதல் மாணாக்கர் கடனாகும். |
அகத்திணை ஒழுக்கமாகிய இருவகைக் கைகோளுள் முதலாவதாகச் செய்யுளியலுள் |
காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் |
பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்(று) |
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு |
மறையென மொழிதல் மறையோ ராறே |
(செய் - 178) |
என ஓதப்பெறும் களவாகிய கைகோளின் இயல்பினை விரித்துக் கூறலின் இது களவியல் என்னும் பெயர்த்தாயிற்று. களவாவது கரந்தொழுகும் ஒழுக்கம். களவொழுக்கம் என்னும் தொகைச்சொல் இறுதி குறைந்து களவென நின்றது. |
களவொழுக்கமாவது ஒத்த கிழவனும் கிழத்தியுமாகிய தலைமக்கள் தத்தமக்குரியோர் கரணமொடு புணர்த்துக் கொடுப்பக் கொண்டு இணையாமல் உயர்ந்த பாலதாணையான் தாமே ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுத் தம்முள் கூடி அக்கூட்டத்தைத் தமர் அறியாவாறு மறைத்தொழுகும் ஒழுக்கமாம். இதனை மறை என்றும் அருமறை என்றும் வழங்குவர். |
ஈண்டுக் களவென்றது தம் ஒழுகலாற்றினைத் தாயரும் தம் ஐயரும் அறியாவாறு மறைத்தலாகிய அவ்வளவேயாம். எனவே பிறர்க்குரிய பொருளை அவரறியாது வஞ்சித்துக் கோடலாகிய களவுவேறு; இது வேறு என்பதுபோதரும், உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிராதலானும் பின்னர்க் கற்பொடு நிறைவுறுதலானும் இஃது அறநெறியாதல் பெறப்படும். |
இவ்வியல், புறத்திணையியலின் பின் வைக்கப்பட்டதாயினும் அதனொடு இயையாது அகத்திணையியலொடு இயைபுடைத்தாகும். அங்ஙனமாயின் புறத்திணையியலை இடைவைத்த தென்னையெனின்? புறத்திணையாவது கைக்கிளை முதலாகக் கிளக்கப்பெற்ற அகத்திணை ஏழனது புறக்கூறுகளே என்பதும் அகத்திணைக்கு ஓதப்பெற்ற முதற்பொருளும் கருப்பொருளும் புறத்திணைக்கும் உரிய என்பதும் புறத்திணைக்கண் வரும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், வினைவலர், அடியோர் முதலாய மாந்தரே அகத்திணைக்கண் திணைநிலை மக்களாக ஓதப்பெற்றவர் என்பதும், ஓதல் முதலாய பிரிவுகட்கு உரியோரும் அவரே என்பதும் புறத்திணை ஒழுகலாறுகளே |