மிகச்சிறப்பாக   அமைந்துள்ளன. ஒவ்வொரு இயலையும் நன்கு ஆராய்ந்து
பேரறிஞர்   திரு. வே. கோபாலையர்   அவர்கள்   தம்   கருத்துக்களை
விரிவாகக் கூறியுள்ளார். பொருளதிகாரம் தமிழ்  மொழிக்கே   உரியதொரு
சிறப்பான கூறாகும். அதற்குப் பெரும்பாலும்   மனு முதலிய   வடமொழிக்
கோட்பாடுகளைக்   கருத்திற் கொண்டு பழைய உரையாசிரியர்கள் பொருள்
செய்துள்ளார்கள் என்பது இக்காண்டிகை உரையாசிரியரின் கருத்து. எனவே
பல     நூற்பாக்களுக்குப்     புதிய     உரைகூறி     அதற்குச்   சங்க
இலக்கியங்களிலிருந்தே   மேற்கோள்களைக்    காட்டி   விளக்கியிருப்பது
பாராட்டத்தக்கது. இப்புதிய   உரையுள்   சிலவற்றிற்கு   அறிஞர்களுக்குள்
கருத்து வேறுபாடு  தோன்றலாம்.   எனினும்   பாவலரேறு   அவர்களின்
நுட்பமான பல விளக்கங்கள் இலக்கிய  இலக்கண ஆராய்ச்சி அறிஞர்களின்
சிந்தனையில் ஒரு திருப்பத்தை   உண்டாக்கும்   என்பதில்   ஐயமில்லை.
விரைந்து இதன் மூன்றாம்   பகுதியும்   வெளிவரவும் - இவற்றைத்  தமிழ்
வளர்ச்சியில் ஆர்வமுடைய அன்புடையார் யாவரும் பயின்று பயன்பெறவும்
வேண்டுகிறேன். இவ் உரையாசிரியர்  பல்லாண்டுகள் உடல்   நலத்தோடும்
பிற வளத்தோடும் வாழ்ந்து தமிழன்னைக்குத் தொண்டாற்ற வேண்டுமென்று
விரும்பி இறையருளை வேண்டி வாழ்த்துகின்றேன். வாழ்க!
 

யு. சுப்ரமணியன்
 

நன்றியுரை
 

பொருளதிகார   ஆராய்ச்சிக்   காண்டிகையுரையின்   இவ் இரண்டாம்
பகுதியையும்   பார்த்து   அருளாசி   வழங்கியுள்ள    வணக்கத்திற்குரிய
காத்தையாசுவாமி அவர்களுக்கும் தமிழ்ப் பணிக்கே தன்னை   ஆட்படுத்தி
இடையறாத்   தொண்டாற்றி  வரும் திரு.உலக சுப்பிரமணியனார் அவர்கள்
முறையாக ஊக்கி அகங் கனிந்தவாழ்த்துக்கள் வழங்கியுள்ள அவர்களுக்கும்.
ஒவ்வொரு  இயலின்   பாட வேறுபாடு உட்பட நுணுகி ஆராய்ந்து பழைய
உரையொடு  ஒப்பிட்டு மிகச் சிறந்ததொரு ஆய்வு முன்னுரை வழங்கியுள்ள
கெழுதகை   நண்பர்   திரு. தி. வே. கோபாலையரவர்கட்கும்   இவ்வுரை
வெளிவரப்    பெரிதும்     ஊக்கமளித்துவரும்   டாக்டர்   சிலம்பொலி
சு. செல்லப்பன்  அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் உடன்
பிறப்பன்ன என் கெழுதகை  நண்பருமான   பேராசிரியர்   கு. சிவஞானம்
அவர்களுக்கும் இப்பகுதியையும் சிறப்பாக அச்சிட்டளித்துள்ள பேராசிரியர்.
இராமச்சந்திரன்  அவர்கட்கும்   உளமார்ந்த   நன்றி   செலுத்துகின்றேன்.
என்னை இப்பணிக்கு ஆளாக்கிய  இறைவன்   திருவடிகளைச்  சிந்தித்துப்
போற்றுகிறேன்.
 

அன்பன்,
 

ச. பாலசுந்தரம்.