அகத்திணைக்கண் ஓதப்பெற்ற பிரிவுகளுக்குக் காரணம் என்பதும் இனிது புலனாதல் வேண்டி அகத்திணையைச் சாரப் புறத்திணை வைக்கப்பட்டது. அதன் பயன் "வெட்சி தானே குறிஞ்சியது புறனே" என மாட்டெறிந்து கூறலும் கைக்கிளை முதலாய எழுதிணைகளின் புறக்கூறுகளே ஏழு புறத்திணைகளாம் எனப் புலப்படுத்தலுமாம். |
'களவு' என்பதற்கு இறையனார் களவியலுரையாசிரியரும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கூறும் விளக்கங்கள் மிகைபடக் கூறலாயும், மற்றொன்று விரித்தலாயும் மயங்க வைத்தலாயும் உள்ளமையை ஓர்ந்தறிக. |
சூ. 93 : | இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு |
| அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் |
| காமக் கூட்டம் காணுங் காலை |
| மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் |
| துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே |
க - து : | களவென்னும் கைகோள் அகத்திணை ஏழனுள் நடுவணைந் திணைகளின் கூறு எனவும் அதன்கண் நிகழும் கூட்டம் எண்வகை மன்றலுள்யாழோர் மணம் எனவும் கூறுகின்றது. |
பொருள் :உயர்திணையாய மாந்தர் மேற்கொண்டொழுகும், இன்பம், பொருள், அறம் என்று சொல்லப்பட்ட அம்மூவகையாகிய முதற்பொருளிடத்தே இன்பத்திற்குரிய அன்பொடு பொருந்திய அகனைந்திணை ஒழுகலாற்றின்கண் அதன் பகுதியாகிய களவென்னும் கைகோளிடத்து நிகழும் காமக்கூட்டத்தினது இயல்பினைத் தேர்ந்துணர்ந்துணருங்கால் அது தமிழ் மாமறையோர் இன்ப நூலிடத்து வகுத்துக் கூறிய எண்வகை மன்றற் புணர்ச்சியுள் பாடுதுறையமைந்த நல்யாழினையுடைய துணைமையோரது இயல்பினதாகும். |
இன்பம் பொருள் அறன் என்னும் மும்முதற் பொருளுள் அறம் உயர்திணையாகிய மக்கட்கே சிறந்துரிமை பெற்ற நெறியாகலின் செய்யுளியலுள் 'அந்நிலை மருங்கின்' அறமுத லாகிய, மும்முதற் பொருட்கும் உரிய என்ப" (செய் - 102) என அறத்தை முற்கூறுவார், ஈண்டு இன்பத்தை முற்கூறினார் மன்பதைக்கெல்லாம் உரித்தாதல் பற்றியும் காம உணர்வு இயற்கையாதல் பற்றியும் அகத்திணைக்கண் தலைமைப்பாடுறுதல் பற்றியும் என்க. |