'உயர்ந்த பால தாணையான்' (கள-2) ஒத்த கிழவனும் கிழத்தியும் எதிர்ப்பட்டுத் தாமே தம் நெஞ்சங்கலந்த வழி அவ்வுள்ளப்புணர்ச்சி அளவானே அமைந்து வரைந்து கொண்டு கற்பின் ஆக்கத்தின்கண் செல்லாமல் ஒரோவழி வேட்கை மிகுதியான் ஆற்றாமை மேலிட்டு மெய்யுற்றுப் புணர்தலும், எதிர்ப்பட்ட வழி உள்ளப் புணர்ச்சியளவானே பிரிந்து மற்றை நாள் இடந்தலைப்பட்டுப் புணர்தலும், பின்னர்ப் பாங்கன் வாயிலாக இடந்தலைப்பட்டுக் கூடுதலும், தோழி மதியுடம்பட்டுக் கூட்டுவிக்கக் கூடுதலும், களவு நீட்டித்தவிடத்துக் குறிவழிச்சேறலும், அல்ல குறிப்படுதலும், தமர் வரைவுஉடன்படாதவழிக் கொண்டுதலைக் கழிதலும் ஆகிய ஒழுகலாறுகள் அறக்கழிவுடையன வல்ல அவை தெய்வப் புணர்ச்சியாய், அறத்தொடுபட்ட சால்பினவே எனத் தெளிதல் வேண்டிக் "காணுங்காலை" என்றார். |
"மறையோர்" என்றது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளைப் பற்றிய உண்மைகளை நுண்மையொடு வகுத்தோதிய தமிழ் நான்மறை நூலோரை. இதனை "மறையென மொழிதல் மறையோ ராறே" என்னும் செய்யுளியற் சூத்திரத்தான் அறிக. தேஎம் என்றது அம்மறை மொழிகளைக் கூறற்கிடமாக அமைந்த நூலினை, தேஎம் ஆகுபெயர். 'மன்றல்' என்றது மணத்தினை. மணமாவது, கிழவனும் கிழத்தியுமாகிய இருவர் கூடி ஒழுகும் இன்ப ஒழுக்கமாம். மன்றல் எனினும் மணம் எனினும் கூட்டம் எனினும் ஒக்கும். துறையமையாழ் எனவும் நல்யாழ் எனவும் கூட்டிப் பொருள் கொள்க. துறையாவது எழுவகைப் பண்களையும் நிறந் தோன்ற வகுத்தமைக்கும் பாலைத்திறங்களாம். துணைமையோரது யாழ் இன்பமே பற்றி இசைத்தலின் நல்யாழ் எனப்பட்டது. |