| (புறத் - 19) ஈண்டுப் பெருமணம் என்றதைப் பெருந்திணை என்பது போலக்கொள்க. |
8. | அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கரணமின்றி நிகழும் சிறுமணமன்றல் (கலி - 112) |
மேற்கூறப்பெற்ற எண்வகை மணங்களும் தமிழ் நான்மறையுள் இன்பம் பற்றிய மறைநூல்கள் மறைந்தமையான் எடுத்துக்காட்டி நிறுவும் வாய்ப்பில்லாத நிலையில் இந்நூலானும் கலித்தொகை முதலிய சங்கச்செய்யுட்களானும் உய்த்துணர்ந்து கூறப்பெற்றனவாகும். மாணாக்கர்மேலும் ஆய்ந்து கொள்வாராக. |
மேற்கூறியவற்றுள் அருமணமும் சிறுமணமும் கைக்கிளையின் பாற்படுவதற்கும் பெருமணம் பெருந்திணையின் பாற்படுதற்கும் ஏனைய ஐந்திணையின் பாற்படுதற்கும் ஏற்பனவாம். அவற்றுள் பாலதாணையான் நிகழும் தெய்வமணமே ஈண்டுக் கூறிய காமக்கூட்டமெனக் கொள்க. |
இனித் தமிழ்ப் பண்பாட்டினையும் தொல்லோர் நூல் நெறியையும் ஓராது குறை நூல் செய்த இறையனார் அகப்பொருளாசிரியரும் அதன் வித்தக உரையாசிரியரும், இளம்பூரணருள்ளிட்ட தொல்காப்பிய உரையாளரும் நம்பியகப் பொருள் விளக்கம் முதலாய இடைக்கால நூலாசிரியன்மாரும் மறை - மறையோர் என்பவற்றிற்கு முறையே ஆரியர்க்குரிய நால் வேதங்களையும், அவற்றைப் பயின்ற அவ்வேதியரையும் பொருளாக்கி மன்றல் எட்டு என்றதற்குப் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் பைசாசம் என விளக்கங் கூறிச் சென்றனர். |
நச்சினார்க்கினியர் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்ற பாயிரத்தொடருக்குப் பொருள் கூறுமிடத்து நான்மறையாவன இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்றல் ஒவ்வாது இவ்வகுப்பு வியாசரால் செய்யப்பட்டது. வியாசருக்குக் காலத்தான் முற்பட்டவர் திரணதூமாக்கினி என்னும் தொல்காப்பியர் எனச் செவிவழிச் செய்தியாக அறிந்து கூறியுள்ளமையான் "மறையோர் தேஎம்" என்பதற்கு 'மறை ஓரிடத்துக் கூறிய' எனப் பொருள் கூறினார். காரணம் சுருதி எனப்படும் வேதத்துள் பிரமம் முதலாய மணங்கள் குறிப்பிடப்பெறாமல் மிருதி என்னும் சார்பு நூல்களுள் கூறப்பெற்றுள்ளமையே யாகும். எனினும் பாயிரத்துள் தாம் கூறியதை மறந்து மன்றல் எட்டென்பதற்குப் பிரமம் பிரசாபத்தியம் முதலியவற்றையே பொருளாகக் கூறிச் சென்றார். |