8களவியல்

உரையாளர்   கூறும்   அவ் எண்வகையுள் இராக்கதம் என்பது அஞ்சி
விலகும் வஞ்சியை வலிதிற் பற்றிப் புணர்தல் என்பார். அது     தீயகாமக்
கொடுஞ்செயலாவதன்றி மணமெனற்கு    ஒவ்வாதென்பது    வெளிப்படை.
பேய்நிலை என்பது அறிவு திரிந்து பித்தேறி யுழல்வாரையும் உணர்வின்றித்
துஞ்சிக்     கிடந்தாரையும்     மயங்கிக்    கிடந்தாரையும் உயிர் நீங்கிக்
கிடந்தாரையும் புணர்தல்   என்பார்.   அஃதோர் கயமைச் செயலாவதன்றி
மணமென நினைதற்கும்    ஏலாமை    தெரியலாம். இவற்றை மணமெனக்
கூறுதல் நல்லோர்க்கு நாணுத்   தருவதாகும். எனவே உரையாளர் ஆயாது
கூறிய பிரமம் முதலியவற்றை   உரையாகக்    கொள்ளுதல்    ஒவ்வாமை
புலனாகும்.
 

சூ. 94 :

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோ னாயினும் கடிவரை யின்றே

(2)
 

க - து :

தெய்வமணமாகிய    காமக்கூட்டம் நேர்தற்கு ஏதுவும் அங்ஙனம்
கூடும் கிழவன் கிழத்தியரது தகவும் ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஒன்றுபடுத்துவது    வேறுபடுத்துவது என்று சொல்லப்படும்
இருவகை ஊழினிடத்தே பொருந்தி, ஒன்றுபடுத்தலைச் செய்யும்    உயர்ந்த
ஊழினது    ஆணையானே   பிறப்பு முதலாயவற்றான் ஒத்த தலைமகனும்
தலைமகளும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுக்   காண்பார்.     ஒப்புமைக்
கூறுகளுள்     சிலவற்றான்    தலைமகன் மிக்கானாயினும் அவ்வேறுபாடு
காரணமாக அவர்தம் தலைமைப்பாடு நூலோரான் கடியப்படுதலில்லை.
 

அக    ஒழுக்கமாகிய    ஐந்திணை  நிகழ்ச்சிகள் யாவும் கூடியிருத்தல்
பிரிந்திருத்தல்      என்னும்      இருவகையாயே           நிகழ்தலின்
ஒன்றுபடுத்தல்-வேறுபடுத்தல்     எனப்     பாலும்   (ஊழ்வினை)   இரு
வகைத்தாயிற்று.
 

அகனைந்திணையாகிய  ஒழுக்கத்தை மேற்கொள்ளும் தலைமக்கள் அவ்
இருவகை  (புணர்தல்-பிரிதல்)     ஊழின்பாற்பட்டு        இயங்குதலான்
இருபால்வயின் ஒன்றி என்றார். ஒன்றி என்னும் செய்தெனெச்சம்   காண்ப,
என்பதனொடு      முடியும்.     பால்    என்றது பால்வரை தெய்வத்தை.
தெய்வப்புணர்ச்சி நிகழ்தற்கு ஏதுவானமையான் ஒன்றுபடுத்தும்    பாலினை
உயர்ந்தபால் என்றார். இன்பமே பயத்தலின் அஃது உயர்ந்ததாயிற்று.