களவியல்9

இதனை "இம்மை போலக் காட்டி யும்மை

இடையில் காட்சி நின்னொடு

உடனுறை வாக்குக உயர்ந்த பாலே"

(புற-236)
 

எனவரும்    கபிலர்    கூற்றானறிக.  ஒப்புமையாவது, மெய்ப்பாட்டியலுள்
கூறப்படும்.
 

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு 

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

(மெய்-26)
 

என்னும் பத்துவகை    ஒப்புமைகளையாம். தலைவன் மிகுதல் குலத்தானும்
அகவையானும்    மிக்கிருத்தல் - தலைவி உருவான் மிகுதல் சிறுபான்மை
தலைவன் கூற்றின்கண்வரும்.
 

இனி உரையாசிரியன்மார், ஒன்றி என்பதனை உயர்ந்தபால்  என்பதற்கு
அடையாகக் கொண்டு பொருள் கூறுவர். ஒன்றே வேறே       என்பதற்கு
நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் நூல் நெறிக்கு ஒவ்வுமாறில்லை.
 

இது அகத்திணையியலுள் "கலந்த பொழுதும்    காட்சியு   மன்ன" (18)
எனச் சார்பு உரிப்பொருளாகக் கூறப்பட்டவற்றுள் ஒரு கூறாகிய    'காட்சி'
யாகும்.
 

சூ. 95 :

சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப

இழிந்துழி இழிபே சுட்ட லான. 

(3)
 

க - து :

'ஒத்த     கிழவனும்    கிழத்தியும்   காண்ப'  என மேற்கூறிய
காட்சிக்கண்  நிகழும் உணர்வும், அவ்வுணர்விற்குரிய காரணமும்
பற்றிக் கூறுகின்றது.
 

பொருள்: தலைவன்    தலைவிக்குரிய    ஒப்புமைப்     பகுதிகளுள்
கட்புலனாகும்     உருவானும்       திருவானும்    தலைமகள்   சிறந்து
தோன்றுமிடத்துத் தலைவன் வேட்கையுற்று     வியத்தற்குக்  காரணமாகிய
ஐயம் தோன்றுதல் சிறப்பாகும்.   அவற்றான்    தலைவி    சிறவாவிடத்து
அக்குறைபாடே உள்ளத்தில் நிகழுமாதலின், எனக் கூறுவர் நூலோர்.
 

களவிற்குரிய    சிறந்த   மரபினவாகப்     பின்னர்க்     கூறப்படும்
செயல்-உணர்வுகளுள்    முதலாவதாகிய     'வேட்கை'  என்பது காட்சிப்
பொலிவு காரணமாகத் தோன்றுவதாகலின் தலைவி உருவானும்  திருவானும்
சிறந்து தோன்ற வேண்டுமென்பது நூலோர் கொள்கை   என்பது   விளங்க
'என்ப' என்றார்.