களவியல்11

ஐயம்   என்னும் பண்புரிச் சொற்கு முதனிலை ஐ என்பதேயாம். அஃது
பண்புப் பொருள் தரும் அம் என்னும் இறுதிநிலை இடைச்சொல்லொடு கூடி
ஐயம் எனப் பெயராக வரும். இதனைத் தேரான் தெளிவும் தெரிந்தான்கண்
ஐயுறவும் (குறள்) என வருவனவற்றானறிக. மொழியாக்க நெறியினை ஓராமல்
உரையாளர் ஐயம் என்பது    அதிகாரத்தான்     வந்ததெனக் கூறி 'நிகழ
நின்றவை'    எனப்பன்மையாகப்    பொருள்     உரைத்துச்  சென்றனர்.
நச்சினார்க்கினியர் இதற்குக் கற்பனையாகப் பொருள்     விரித்து   மயங்க
வைப்பாராயினார்.
 

'பிற' என்றது, கால் நிலந்தோய்தல், தூசு மாசுறல்,   வியர்த்தல்,  நிழல்
சாய்தல் முதலியவற்றை. இவை கருவியாக ஐயம்   நீங்கிய     வழி இவள்
மானிடமகளே எனத் தெளிவானாகலின் துணிவும்  இதனாற்      பெறப்பட
வைத்தார் என்க.
 

எ - டு :

திருநுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும்

இருநிலஞ் சேவடியும் தோயும்-அரிபரந்த

போகிதழ் உண்கணும் இமைக்கும்

அகுமற்றிவள் அகலிடத் தணங்கே

(புறப்-வெ-கை-3)
 

எனவரும்.
 

சூ. 97 :

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் 

(5)
 

க - து :

ஐயங்களையும்   கருவி  கூறிய முகத்தான், காமத்திணையின்கண்
பேச்சு   நிகழ்த்தும்   கருவியாமாறு கூறி அதனான் குறிப்பறிதல்
நிகழும் இயல்பு கூறுகின்றது.
 

பொருள் :தலைமக்கள்  இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர்
தம்    கருத்துக்களை    ஒன்றுபடுத்தற்கு  உணர்வினைக் கூட்டியுரைக்கும்
குறிப்புரைகளாகும்.
 

என்றது  'காமஞ்    சொல்லா  நாட்ட மின்மையின்' அவற்றான் தத்தம்
உள்ளக் கருத்தினை   அளாவி    ஒருவர்   ஒருவரின் குறிப்பினையறிந்து
கொள்வார் என்றவாறு. நோக்கமே பேச்சுமொழி யொப்பக்  கருத்துரைக்கும்
என்பதனைக் "கண்ணொடு கண்ணினைக்   நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் மில" (குறள்) என்பதனானறிக.
 

தலைவன்    கூற்றானும்    உணர்த்தற்குரியன் ஆதலின் நோக்கத்தான்
உரைக்கும் குறிப்புரை தலைவியிடத்துச் சிறப்புரிமை    பெறும்.  இதனைப்
பின்வரும் 19, 20, 28 ஆம் நூற்பாக்களான் அறிந்து கொள்க.