12களவியல்

சூ. 98 :

குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்

ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்

(6)
 

க - து :

குறிப்புரையான்    உள்ளம்     ஒத்தவழிக்       களவிற்குரிய
ஒழுகலாறுகள் நிகழுமென்கின்றது.
 

பொருள் :ஒருவர்க்கொருவர்    தம்    நாட்டங்களான்    உரைத்த
குறிப்புரை தாம் கருதிய காமக்கூட்டத்தினைத் திரிபின்றிக்  கொள்ளுமாயின்
அவ்வழிக் களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழும் என்று  கூறுவர் புலவர்.
 

குறிப்பு மொழிகள் உடன்பாட்டினையே தருதல்  ஒருதலையன்று என்பது
தோன்றக் "குறித்தது கொள்ளுமாயின்" என்றார். இதனானும் காட்சி   ஐயம்
துணிவு குறிப்பறிதல் என்பவை சார்புரிப்பொருளாகும் என்பது விளங்கும்.
 

குறித்தது கொண்டவழி அறிவுடம்பட்டமை  தெளிதலான்   தலைமக்கள்
களவொழுக்கத்தினை     மேற்கொள்வர்    என்பது  இதனான் விளங்கும்,
அவ்வாற்றான்    இயற்கைப்புணர்ச்சி    முதலாய  நால்வகைக் கூட்டமும்
அவற்றின்    சார்பாக   நிகழும்   ஏனைய ஒழுகலாறுகளும், மேல் வரும்
"வேட்கை ஒருதலை யுள்ளுதல்"   "முன்னிலை    யாக்கல்    சொல்வழிப்
படுத்தல்",    "மெய்தொட்டுப்     பயிறல்    பொய்பா ராட்டல்" என்னும்
சூத்திரங்களாற்  கூறப்பெறும் செயலுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
நிகழ்வனவாதலின் "ஆங்கவை நிகழும்" என்றார். அவை என்றது இயற்கைப்
புணர்ச்சி முதலாய ஒழுகலாறுகளை என்க.
 

எ - டு :

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 

பசையினள் பைய நகும் (குறள் - 1098)

யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும் (குறள் - 1094)

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை

நகை மொக்கு ளுள்ளது ஒன்று ண்டு (குறள் - 1274)
 

எனவரும்.    இவ்விரண்டு     சூத்திரங்களானும்  கூறப்பட்ட நிகழ்ச்சிகள்
"புகுமுகம் புரிதல்" முதலாகக் கூறப்படும் மெய்ப்பாட்டுப்     பொருள்களாக
அமைதலை மெய்ப்பாட்டியலுள் கண்டுகொள்க.