களவியல்13

சூ. 99 :

பெருமையும் உரனும் ஆடூஉ மேன.
(7)
 

க - து :

'ஒத்த      கிழவனும்     கிழத்தியும்  காண்ப' என மேற்கூறிய
அன்பொடு    புணர்ந்த      ஐந்திணைக்குரிய    தலைமக்கள்
சுட்டிக்     கூறப்பெறாமல்     நாடக    வழக்கும்   உலகியல்
வழக்கும்    பொருந்தச்     செய்யப்      பெறும்   புலனெறி
வழக்கிற்குரியவராகலின்        அவர்தம்         இயல்புகளை
இலக்கண    வகையான்       வரையறை    செய்து    கூறத்
தொடங்கி      இச்சூத்திரத்தான்       அகனைந்திணைக்குரிய
தலைமகனது பொதுவிலக்கணம் ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :பெருமையும்     உரனுமாகிய     இயல்புகள்  தலைமகன்
கண்ணவாம் எனக் கூறுவர் புலவர்.
 

பெருமை - உரன்,      என்பவை     அவற்றிற்குரிய  பண்புகளையும்
ஆற்றல்களையும் குறித்து நின்றன. பெருமைக்குரியவாவன : கல்வி, தறுகண்,
இசைமை, கொடை, ஆராய்ச்சி, ஒப்புரவு,   நடுவுநிலை,    கண்ணோட்டம்
முதலியவாம். உரனுக்குரியவாவன : அஞ்சாமை, அறிவு,   திண்மை,  நிறை,
கடைப்பிடி, துணிவு, ஊராண்மை முதலியவாம்.
 

சூ. 100 :

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப
(8)
 

க - து :

அகனைந்திணைக்குரிய   தலைமகளது இயல்பாமாறு கூறுகின்றது.
 

பொருள் :அச்சமும்,    நாணமும், மடனும் முதன்மைபெற்று நிகழ்தல்
எஞ்ஞான்றும் தலைமகளுக்குரிய இயல்புகளாம் எனக் கூறுவர் புலவர்.
 

இவை   முந்துறுதல். எனவே அவற்றைச் சார்ந்து நிற்பன பிறவும் உள.
அவையும் தலைமகளுக்குரிய என்பது பெறப்படும். அவையாவன :பயிர்ப்பும்,
பேதைமையும், பொறையும் பிறவுமாம்.
 

அச்சமாவது; அன்புகாரணமாகத் தோன்றும்   உட்கு.    நாணமாவது :
பெண்மைக்குப்     பொலிவுதரும்   உள்ளப்பாங்கு,  மடனாவது:  செவிலி
முதலானோர்   உணர்த்துவனவற்றை    ஆராயாது    மேற்கொள்ளுதலும்
அங்ஙனம் கொண்டவற்றை இறுகப்பற்றி யொழுகுதலுமாம்.
 

பயிர்ப்பாவது:    பயிலாதவற்றின்     மேற்கொள்ளும்    அருவருப்பு,
பேதைமையாவது;       பிள்ளைத்தன்மை,     பொறையாவது:   வறுமை
முதலாயவற்றைப் பொறுத்தொழுகுதல்.