xv | தொல்காப்பியர் காலத்தில் ஓதல், பகை, தூது என்ற மூன்று வகையான பிரிவு இருந்துள்ளன என்று அகத்திணையியல் கூறுகின்றது. ஆனால் கற்பியலில் காமக்கிழத்தியின் கூற்று தரப்படுகிறது. மேலும், பரத்தை காரணமாக எழும் கூற்றை அகத்திணையியலில் தலைவன் கூற்று தருகிறது. அவ்வாறு காமக்கிழத்தி, பரத்தை ஆகியவர்களினால் ஏற்படும் பிரிவும் இடம் பெறுகின்றமையால், காமம் தொடர்பான பிரிவும் உண்டு. மேற்கூறிய ஓதல் பகை, தூது, பொருள் ஈட்டல் போன்ற பிரிவுகள் தலைமகனுக்குப் பெருமை. ஆனால் காமக்கிழத்தி, பரத்தை தொடர்பான பிரிவால் தலைகனுக்குச் சிறுமை. | கைக்கிளை | ‘கைக்கிளை’ என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். காமச்செவ்வி அறியாச் சிறுமியிடம் தலைமகன் ஒருவனுக்குத் தன்னலம் மறந்து ‘அவள் பொருட்டே வாழ்வு’ எனக்கொள்ளும் காதல் கைக்கிளை எனப்படும். | காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளமைப் பிராயத்தாள் ஒருத்தியினிடத்து, அவளைத் தவிர தன் காமநோய்க்கு வேறு மருந்தில்லை என்று பெருந்துயர் கொண்ட காதலன் ஒருவன், ஆற்றாமையினால் புகழ்வது போலப் பழித்தலும் பழிப்பது போலப் புகழ்தலுமாகக் கூட்டிச் சொல்லி, மறுமாற்றம் பெறாது தன்னுணர்ச்சி தானுரைத்து மகிழ்தல் கைக்கிளையின் குறிப்பாகும் (53). | பெருந்திணை | மடலேறுவேன் என்று கூறுவதோடு அமையாது, தலைவன் மடலேறுதலும் இன்பம் துய்த்தற்குரிய பருவம் கழிந்த பிறகும் எழும் இன்ப விருப்பமும் தெளிந்த எண்ணத்தை அழிக்கும் காமமும் காமத்தின் மிகுதியால் தம்மை விரும்பாதவரையும் வலிதற் புணரும் தன்மையும் என்று கூறப்பட்ட நான்கும் பெருந்திணையின் குறிப்பாகும். இவ்வொழுக்கத்தை இழிவொழுக்கம் என்பர் (54). | முன்பு கூறிய பெருந்திணையின் நான்கு கூறுகளாகிய ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம், மிக்க காமத்து மிடல் போன்றவைகள் கைக்கிளைக்கும் உரியன (55). |
|
|