“தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தான் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல் எல்லறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின் அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள் மாலை”2 பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம் நோய்தெற உழைப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல்செய் தகன்றாரை உடையையோ நீ; மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில் நன்றறை கொன்றனர் அவரெனச் கலங்கிய என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ; பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல இனியசெய் தகன்றாரை உடையையோ நீ; எனவாங்கு, அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படம் பெரும்பே துறுதல் களைமதி பெரும! வருந்திய செல்லல் தீர் திறனறி ஒருவன் மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே.” |