பக்கம் எண் :

114தொல்காப்பியம் - உரைவளம்

ஒழுக்கத்தோடு     ஒருங்கே   நிலமயக்கங்கொள்ளுதல்   மரபன்று   என்பதும்.  ஒவ்வொரு  திணையும்
ஒவ்வொரு  நிலத்திற்குச்  சிறப்புரிமை யுடையதாகக் கூறப்படினும்  அதுகொண்டு  அந்நிலத்து  அவ்வோர்
ஒழுக்கமே  நிகழ  வேண்டும்  என்ற  வரையறையின்றி  நிலத்தியல் கருதாமல்  திணைமயக்கம் (அதாவது
பிறவொழுக்க நிகழ்ச்சி) கூறுதலும்  மரபென்பதும்,  தொல்காப்பியர்  இச்சூத்திரத்தால் விளக்கிப் போந்தார்.
எனவே,  எங்கு  எவ்வொழுக்கம்  நிகழினும்  அதனால் நிலத்தியல்  மாறாது;  காடு புணர்ச்சி நிகழ்வதால்
குறிஞ்சியாகாது.  முல்லை  நிலமேயாம்  பிரிவாற்றாக்  குறமகளிரங்குவதால்   மலைநிலம்   நெய்தலாகாது;
குறிஞ்சியேயாம்.
  

தத்தம்     இயல்மாறாத நிலம் யாதாயினும், அதில் நிகழும் ஒழுக்கம் பற்றித் திணை வகுப்பது பழைய
மரபு.  ஒழுக்க  இயல்  கருதாது  நிலவகையால்   திணையமைப்பது  பிழைப்பட்ட பிற்கால வழக்கு. அது
தொல்காப்பியர்க்குடன்பாடன்று  என்பது இச்சூத்திரத்தால் தெற்றென  விளங்கும்.  புணர்தல் முதலிய கால
வகைகளும்  தத்தம்  இயற்பொருத்தம்  பற்றித்  தனிச்  சிறப்புரிமை  கொள்ளு  மெனினும், ஒருதிணைக்கு
ஒரே காலந்தான் கூறல் வேண்டுமெனும் வரையறையில்லை.  எந்தத்  திணையும்  தன் இயல்பற்றி அதற்குச்
சிறந்துரியதல்லாத   பிற  நிலம்   பிற்காலங்களிலும்   நிகழ்தல்  கூடுமாதலின்,  ஒவ்வொரு  திணையும்
எல்லாநிலங்களிலும்  போலவே  எல்லாக்  காலங்களோடும்   கலந்து   நிகழ்வது  கடியப்படாது என்பதும்
வெளிப்படை.    எனவே,    ஒவ்வொரொழுக்கமும்    அதற்குச்     சிறந்துரியதாகக்    கூறப்   பெற்ற
நிலம்பொழுதுகளிலேயே  நிகழும்  என ஒரு தலையாக்  கொள்ளல் கூடாது.  உரிப்பொருள்களாகிய எல்லா
ஒழுக்கங்களும்,   நிலமும்   பொழுதுமாகிய    முதற்பொருள்   வகைகளில்  ஒரோவொன்றைத்தத்தமக்கு
இயலியைபு   பற்றிச்   சிறப்புரிமை  கொள்ளினும்,   எல்லா   நிலங்களினும்  எல்லாப்  பொழுதுகளினும்
எத்திணையும்  ஏற்ற  பெற்றி  கலந்து  நிகழ்தலுங்  கடியப்படாது  என்பதே   இச்சூத்திரக்   கருத்தாதல்
தெளிவாகும்.   இனி,   இச்சூத்திரத்தில்  முதற்  பொருளிரண்டில்  பொழுது   கூறாமல்   நிலம்  விதந்து
கூறப்பட்டது.  பொழுது  போலன்றித்  திணையொடு  நிலம்  குறிஞ்சி  முதலிய   பொதுப் பெயர் பெற்று
பெயரொற்றுமையில்லாத   பொழுதுகள்   பற்றி   அத்தகைய  மயக்கத்திற்கிடனில்லையாதலின்,  பொழுது
மயங்காமை விதந்து கூற வேண்டிற்றில்லை.