மயங்கும் என்றவாறாயிற்று” என்பதே சூத்திரத்தில் ஒரு நிலத்திற்குரிய வொழுக்கம் வேறொரு நிலத்திற்குக் கூறுதலும் கடிநிலையிலவெனத் தெள்ளத்தெளிய விளக்கியிருக்கவும், அதற்கு மாறாக ‘ஒரு திணைக்குரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற் பொருளோடு சேர நிற்றல் கூடாது” என முரணப் பொருள் கூறுவது அமைவுடைத்தன்று. தொல்காப்பியர் ‘திணை மயக்குறுதல்’ என்றாரன்றி, ‘திணையில் முதற்பொருள் மயங்குதல்’ என்று கூறினாரில்லை. ஆதலின் இளம்பூரணர் கூற்றும் இச்சூத்திரச் சொற்றொடருக்கு நேரிய பொருளன்று. |
திணைகளையும் நிலங்களையும் சுட்டி அவற்றினியைபு விளக்க எழுந்த இச்சூத்திரத்தில், அவற்றின் புறம்பான காலங்களையும் கருப்பொருள்களையும் புகுத்த வேண்டிப் பழைய உரைகாரர் இச்சூத்திரத்திற்குத் தம்முன் மாறுபடப் பலவாறு மயக்கத்திற்கிடமான பொருந்தாப்பொருள் கூறுவாராயினர். |
திணைமயக்குறுதற்குச் செய்யுள்:- |
“கடற்கானற் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட அடற்கானற் புன்னை தாழ்ந் தாற்ற - மடற்கானல் அன்றி லகவும் அணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி லிளமணன்மேல் மொய்த்து” |
(திணைமாலை 190. செய்-56) |
இதில் குறிஞ்சித் திணையின் இரவுக்குறி நேரும் துறை, தனக்குரிய குறிஞ்சி நிலத்தன்றி, இரங்கற்றிணைக்குரிய நெய்தனிலத்து மயங்கியதறிக. அவ்வாறு குறிஞ்சித்திணை வந்து கலப்பினும், அதனால் நிலத்தியல் மயங்காமல் நெய்தலாகவே நிற்பது கூறுப்படுதலும் காண்க. இன்னும் “புலாலகற்றும்” எனும் திணைமாலை (35-ஆம்) வெண்பாவும் நெய்தனிலத்தில் குறிஞ்சித் திணைமயக்கம் கூறும். இனி, |
‘புன்புறவே சேவலோடூடல் பொருளன்றால், அன்புற வேயுடையா ராயினும் - வன்புற் றதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த் திதுகாணென் வண்ண மினி.” |
(திணைமாலை 150 செய்-74) |