பாடலுட் பயிலும் பொருள்கள் முதல் கரு உரி என்னும் மூன்றுமாம் என்றும் அம்மூன்றன் காரணமாகத்திணை உணரப்படும் என்றும் அவற்றுள் முதற் பொருளாவன நிலமும் பொழுதும் என்றும் எவ்வெந்நிலத்துக்கு எவ்வெப்பொழுது உரியது என்றும் கூறி வந்த ஆசிரியர் நிலத்தொடர்பாகவே ‘திணைமயக்குறுதலும்’ என்னும் இச்சூத்திரம் கூறினார் என்க. அதாவது நிலம் பொழுதும் என்னும் முதற்பொருள் தொடர்பாகவே கூறினார். அதனால் திணைமயக்குறுதல் என்பது நிலமும் பொழுதும் மயங்குதலையே குறிக்கும். ஆனால் ‘நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று, என்றதால் திணைமயக்குறுதல் என்பது பொழுதுமயங்குதலையே குறிக்கும். திணையுணர்தற்குக் கருப்பொருளும் உரிப்பொருளும் காரணங்களாக அமைதலின் திணைமயக்குறுதல் என்பது கருப்பொருள் மயக்கத்தையும் உரிப்பொருள் மயக்கத்தையும் உணர்த்தாதோ எனின் பின்னர் அடுத்து ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (15) என உரிப்பொருளை விலக்கிக்கருப்பொருள் மயங்கும் என்று கூறுதலின் இச்சூத்திரத்துத் திணைமயக்குறுதல் என்றது பொழுது மயங்குதலையே குறிக்கும் என்க. |