தொல்காப்பியம் பொருளதிகாரம் (உரைவளம்) அகத்திணையியல் |
இளம்பூரணர் |
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், பொருளதிகாரம் என்னும் பெயர்த்து. இது, பொருள் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்: நிறுத்த முறையானே1 எழுத்தும் சொல்லும் உணர்த்தினார்; இனிப் பொருள் உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற்கூறப்பட்டது. |
பொருள் என்பது யாதோ எனின், மேற்சொல்லப்பட்ட சொல்லின் உணரப்படுவது. அது, முதல் கரு உரிப்பொருள் என மூவகைப்படும்.2 |
“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை” |
(அகத் - 3) |
என்றா ராகலின். |
முதற்பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும். |
“முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.” |
(அகத் - 4) |
என்றா ராகலின். |
|
1. நிறுத்த முறை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இலக்கண நூலார் வரிசைப்படுத்திய முறை. சிறப்புப் பாயிரத்தில் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என நிறுத்த முறையும் ஆம். சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் பாடியதாயினும் தொல்காப்பியர் கூற்றாகவே கொண்டு கூறுதல் உரையாளர் மரபு. 2. “பொருள் ..... மூவகைப்படும்” இதனால் செய்யுளிற் கூறப்படும் பொருளே பொருளதிகாரத்திற் கூறப்படும் என்பதும், பொருளதிகாரம் செய்யுள் பற்றியதே என்பதும் பெறப்படும் - ஆசி. |