பக்கம் எண் :

120தொல்காப்பியம் - உரைவளம்

இதன் பொருள் :- உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளென்றும் ஓதப்படும் ஐந்திணையும் அல்லாத
கைக்கிளையும்  பெருந்திணையும்   மயங்கவும்   பெறும்  -  நால்வகை   நிலத்தும்  மயங்கவும்  பெறும்
என்றவாறு.
  

உம்மை     எச்சவும்மை யாதலின் உரிப்பொருளாக எடுத்த பாலையும் நால்வகை  நிலத்தும் மயங்கவும்
பெறும் என்றவாறாம். பாலை என்பது ஒன்று பிரிந்து  பலவாகிய  கூற்றின் மேற்றாததலின்  ஒற்றுமைப்பட்டு
நிகழ்கின்றார்  இருவர்  பிரிந்து   வரலும்  பாலையாமன்றே?  அதனால்,  அதுவுங்  குணங்  காரணமாய்ச்
செம்பால் செம்பாலை யாயினாற் போல நின்றது1
  

ஊர்க்கா னிவந்த என்னுங் குறிஞ்சிக்கலியுள்,
  

“ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழிலை
மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ”

(கலி-56)


1. பால் என்பது பிரிவு. ஒரு பொருளின்  பல  பிரிவுகளுக்கும்  உரிய பொதுப்பெயர். நிலத்தின் வன்மை
மென்மைப்   பிரிவுகளை  வன்பால்  மென்பால் என்பர். உயர்திணைப்பிரவு  ஆண்பால்  பெண்பால்
பலர்பால்  எனப்படுதல் காண்க. பண்களுள் பாலைப்பண் என்பதும் ஒன்று அது கொண்ட பிரிவுகளுள்
ஒன்று செம்பால் என்பது. அது செம்பாலை என ஐசாரியை பெற்று வழங்கப்படுகின்றது.
  

அன்புளங்     கொண்ட ஒருவனும் ஒருத்தியும் ஒருவர் என இருந்து பின் தனித்தனிப் பிரிந்திருக்கும்
நிலையும்  பால்  எனப்படும்.  அதனால்  அப்பிரிந்த ஒழுக்கம் பால் எனப்படும். அது ஐசாரியையுடன்
கூடிச் செம்பால் என்பது செம்பாலை ஆனாற் போலப் பாலை எனப்பட்டது.
  

நச்சினார்க்கினியர்   பாலைப்    பெயர்க்காரணத்தை    இவ்விடத்துக்    கூறவேண்டிய    காரணம்
புலப்படவில்லை.